திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்
திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்றனர். திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 65 வார்டுகள் உள்ளன. இதில் 59 வார்டுகளை தி.மு.க கூட்டணியும், 3 வார்டுகளில் அ.தி.மு.க வும், ஒரு வார்டில் அ.ம.மு.க வும், இரண்டு வார்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அனைவரும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்றவர்களில் சிலர் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தங்களின் தலைவர்கள் பெயரில் உறுதி ஏற்றனர். திருச்சி மாநகராட்சியில் 33 பெண்களும், 32 ஆண்களும் மாமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்று மாமன்ற உறுப்பினர்கள் அலுவலகத்திலிருந்து வெளியே வரும் போது அவர்களின் ஆதரவாளர்கள் உற்சாகமாக உறுப்பினர்களை வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது தவிர 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலும் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO