திருச்சி கீழ்க்குடவரைக் கோயில்

திருச்சி கீழ்க்குடவரைக் கோயில்

திருச்சி என்றாலே அனைவருக்கும் மலைக்கோட்டை நினைவிற்கு வரும். மலைக்கோட்டை மாநகர் என்ற பெருமைமிகு உணர்வுடன் நாம் அனைவரும் பாசத்துடன் சொல்லிக்கொள்வது சகஜம். மலைக்கோட்டையை பார்த்தவுடன் ஒரு இனம்புரியாத உணர்வு வரும். திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திருச்சியின் அடையாளமாக திகழ்வது மலைக்கோட்டைதான். 

திருச்சி மலைக்கோட்டையானது இமயமலையை விட காலத்தால் பழமையானது என்பதை நாம் அறிவோம். திருச்சி மலைக்கோட்டையில் இரண்டு புகழ்பெற்ற கோவில்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. தாயுமானசுவாமி கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோவிலும் மிகவும் புகழ் வாய்ந்தது. அதோடல்லாமல் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் கோவிலும் சிறப்பு வாய்ந்ததாகும். பெரும்பாலனவர்களுக்குத் தெரியாத, மக்கள் அதிகம் செல்லாத சிலர் மட்டுமே அறிந்திருக்கும் மேலும் ஒரு கோயிலைப் பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

மலைக்கோட்டையில் மாணிக்க விநாயகர் சன்னதியிலிருந்து படியேறி சென்றவுடன் யானைப் பாதை வரும், அங்கிருந்து மலைக்கோட்டை ஏறாமல் இடதுபுறம் சற்று நடந்து சென்றால் செல்லும் வழியில் வலதுபுறத்தில் ஒரு சிறு வழியில் சென்றால் விசாலமான மலைக்கோட்டை கீழ்க்குடவரைக் கோயில் உள்ளது. இக்கோயில் தொல்லியல் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது.

காலத்தால் முற்பட்ட இந்த கீழ் குடவரைக் கோவில் ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். இந்த குடவரைக் கோவிலில் சிறப்பு; பல தெய்வங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளதாகும். இது பல்லவர் காலக் கோயில் என்றும் பாண்டியர் காலக் கோயில் என்றும் இருவேறு கருத்துக்கள் இருக்கிறது. இக்கோவிலின் அமைப்பைப் பார்க்கும்போது, பல்லவர் கால கோவிலாகவே இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 

இந்த கோவில் குடவரைக் கோவிலின் கட்டிடக்கலைக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.. ஆன்மீக ரீதியாக தாயுமானசுவாமி கோவில் எந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்ததோ அதே அளவுக்கு வரலாற்று ரீதியாக சிறப்பு வாய்ந்தது இந்த கீழ்குடவரைக் கோயிலாகும். இங்கு சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஒரே இடத்தில் சன்னதிகள் எழுப்பப்பட்டு இருக்கிறது, அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தெய்வங்களும் குடவரைச் சிற்பங்களாக இங்கே செதுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் பிரம்மா போன்ற தெய்வங்கள் இங்கே இருக்கின்றன. இந்த குடவரைக் கோவில் திருச்சியின் ஓர் பழமையான தொல்லியல் சின்னமாகும். இனி மலைக்கோட்டை செல்பவர்கள், யானைப் பாதையில் இருந்து அருகில் இருப்பவர்களிடம் கேட்டு இந்த குடவரைக் கோவிலையும் பார்த்து பெருமை கொள்வோம். 

தொகுப்பாளர் தமிழூர் கபிலன்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision