ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிவரும் திருச்சி கல்வி கட்டணம் அறக்கட்டளை

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிவரும் திருச்சி கல்வி கட்டணம் அறக்கட்டளை

இந்த சமூகத்தில் தனி மனிதனின் வெற்றி என்பது அவர்களுடைய கல்வியறிவைப் பொறுத்து அமைகின்றது. கல்வி அறிவு பெறுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் விதமாக திருச்சியயில் ஆரம்பிக்கப்பட்டது தான் கல்வி கட்டணம் அறக்கட்டளை. கல்வி கட்டணம் அறக்கட்டளை பல குழந்தைகளின்   வாழ்க்கையில் கல்வி கிடைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து கல்வி கட்டணம் அறக்கட்டளை காயத்ரி அவர்கள் பகிர்ந்து கொள்கையில், உணவு கல்வி இது ரெண்டும் வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய ஒற்றை நோக்கம். சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து எங்களால் முடிந்தவரை உதவி வருகிறோம். அதேசமயம் எதிர்கால தலைமுறையினர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வியறிவு மட்டுமே உதவும்  என்பதால் அவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்று உதவி வருகிறோம்.

கனவு மெய்ப்பட என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி கொண்டிருந்தோம். அப்போது தான் அவர்களுக்கு கல்வி பெறுவதற்கு ஏதேனும் ஒருவகையில் உதவிட வேண்டுமென்று கல்வி கட்டணம் என்ற அறக்கட்டளை மூலம் பள்ளி கல்லூரிகளில் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களுக்கு இந்த அறக்கட்டளை கல்வி கட்டணம் செலுத்தி அவர்களுடைய கல்விக்கு உதவி வருகிறது.

முதல் முதலாக வாட்ஸ்அப் வழியே ஒரு குழு அமைத்து கல்வி கட்டணம் குறைவு பெயரில் செயல்படுத்தத் தொடங்கினோம்.
அப்போது உதவி தேவைப்படும் பட்சத்தில் முதல் முதலாக எங்களை ஊக்குவிப்பதற்காக என் தந்தையின் நண்பர் ஷாஜகான் உதவினார். அவர் அளித்த ஊக்கமும் அவருடைய வாழ்க்கையும் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

நம்மால் முடிந்தவரை பிறருக்கு உதவிட வேண்டும் என்று அவர் கூறிய வார்த்தைகள் எங்களை தொடர்ந்து இதனைப்  செய்திட  இன்றுவரை ஊக்க சக்தியாக இருந்து கொண்டிருக்கிறது. பிறருக்கு உதவிட வேண்டுமென்று சமூகத்திலுள்ள நல்லுள்ளங்கள் செய்யும் அனைத்து சேவைகளும் இன்றைக்கு யாரோ ஒருவரின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

நம்மிடமிருந்து செய்யும் உதவியைவிட பிறரிடம் இருந்து பெற்று அதை ஒருவருக்கு செய்யும் பொழுது நம்முடைய கடமை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதனை சரியான முறையில் செய்ய வேண்டும் என்று கூடுதல் பொறுப்பும் ஏற்படுகின்றது. அதனை சரியான முறையில் செய்து இன்றைக்கு 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர்.

உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதோடு நில்லாமல் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அவர்களுக்கு ஒரு நண்பராக, பாதுகாப்பாளர் ஆக அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து  நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் உதவும் ஒவ்வொரு மாணவர்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி அவர்களுடைய வாழ்க்கை வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் வெற்றியாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். 


என்னுடன் இணைந்து என் குடும்பத்தாரும் தொடர்ந்து  உதவி வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்றைக்கு, 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து இந்த கல்வி கட்டணம் அறக்கட்டளை மூலம்  பல மாணவர்கள் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். மற்ற நேரங்களில் உதவியதைவிட கொரானா காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கு உதவ பலர் முன்வந்தனர்.

பேரிடர் காலங்களில் நாம் செய்யும் ஒரு சிறு துளி ஆனாலும் அது பெரும் உதவியாகவே கருதப்படும் அத்தகைய சூழலில் பல மாணவர்களுக்கு உதவியது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இன்னும் வரும் காலங்களில் இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பது, பல மாணவர்களுக்கு கல்வி அளிப்பதோடு, மட்டுமின்றி அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே கல்வி கட்டண அறக்கட்டளையின் எதிர்கால கனவுகள் என்கிறார் காயத்ரி.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn