"பெற்றோர்களை இணைக்கும் பாலம்" - திருச்சி பெண்களின் புதிய முயற்சி!

"பெற்றோர்களை இணைக்கும் பாலம்" - திருச்சி பெண்களின் புதிய முயற்சி!

பணி சுமையிலும் கோபத்திலும் எண்ணிலடங்கா சிக்கல்களோடு வீட்டிற்குள் நுழைந்து சின்னஞ்சிறு குழந்தையிடம் சிறிது நேரம் கொஞ்சி விளையாடினாலே அத்தனை சோகமும் பறந்து போகும். மனதிற்கு ஒருவித அமைதியை கொடுக்கும் தமைக்கொண்டவர்கள் குழந்தைகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

Advertisement

ஆனால் சில நேரம் அவர்கள் எடுக்கும் ருத்ரதாண்டவத்தில், வீடே தலைகீழாக மாறி நிற்கும். குழந்தையை வளர்ப்பது அவ்வளவு சிரமமானதா? என்னங்க இப்படி கேட்டுட்டீங்க? அதுவும் இந்த காலத்து பிள்ளைகளை சமாளிப்பது பெரும் பாடாக உள்ளது. வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தில் பானைக்குள் யானை வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தையை போல பலரது வீடுகளில் சுட்டி குழந்தைகள் வளம் வருகின்றன. 

சுட்டி குழந்தைகள் முதல் சைலன்ட் குழந்தைகள் வரை என அனைத்து வகையினரையும் பராமரிப்பது, வளர்ப்பது, பாதுகாப்பது என்பது பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சி பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய "பேரன்டிங் சர்கிள்" குறித்த சிறப்பு தொகுப்பு தான் இது!

பேரன்டிங் சர்கிள் என்பது இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கென இயங்கி வருவது. ஒவ்வொரு நகரத்திலும் சில பொறுப்பாளர்கள் குழுவை இயக்கி வருகிறார்கள். திருச்சியியை பொறுத்தவரை எழில் வாணி மற்றும் யுவ பிரியா ஆகிய இரண்டு தோழிகள் இணைந்து குழந்தை வளர்ப்பில் வரும் சந்தேகங்களையும் சந்தோசங்களையும் பகிர்ந்துகொள்ள 2018ம் ஆண்டு "திருச்சி பேரன்ட்ங் சர்க்கிள்" எனும் குழுவை ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி பேரன்டிங் சர்க்கிள் அட்மின் எழில் வாணியிடம் பேசினோம்.... "தற்போது எங்களுடைய திருச்சி பேரன்டிங் சர்க்கிள் ஃபேஸ்புக் குழுவில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு பணிகளை செய்து வந்த நிலையில் கொரோனா காரணமாக தற்போது ஆன்லைன் மூலம் பெற்றோர்களுக்கு பல்வேறு தலைப்புகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தாய்ப் பாலின் மகிமை, துணி நாப்க்கின் மற்றும் டயப்பர்கள் பற்றிய விழிப்புணர்வை திருச்சி பெற்றோர்களுக்கு அதிகளவில் உருவாக்குகிறோம். எங்கள் முகநூல் பக்கத்தில் கர்ப்பம், குழந்தைப்பேறு மற்றும் தாய்ப்பால் பற்றிய கதைகளை உற்சாகமான தாய்மார்களிடம் இருந்து தொடர்ந்து கேட்கலாம். உதாரணமாக திருச்சியில் இட்லி குக்கர் எங்கு கிடைக்கும்? சிறந்த பிராட்பேண்ட் எது? நடனம், கணித வகுப்பு எங்கே? தையல்காரர் தொடர்பு? வீட்டு வேலைக்கு ஆள் தேவை போன்ற அனைத்து கேள்விகளும் எங்கள் குழுவில் நாங்கள் பகிர்ந்து வருகிறோம். எங்களிடம் வணிக விளம்பர பகுதியும் உள்ளது. இதில் டயப்பர்கள், புடவைகள், மரச்செக்கு எண்ணெய், சத்து மாவு மற்றும் கையால் வடிவமைக்கப்பட்ட கைவினைப் பொருள்கள் என பல தாய்மார்களுக்கு தங்கள் வியாபாரத்தை ஊக்குவிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்‌" என்றார்

பேரன்டிங் சர்க்கிள் அட்மின் எழில் வாணி

மேலும் அரசு மருத்துவமனைகளில் என்.ஐ.சி.யுவில் தாய்ப்பால் கொடுப்பதற்கான தேவையை பூர்த்தி செய்ய திருச்சியிலுள்ள தாய்ப்பால் நன்கொடையாளர்களையும் இனிவரும் காலங்களில் இணைக்க விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் எழில் வாணி!

குழந்தை வளர்ப்பில் என்ன சந்தேகங்கள் இருந்தாலும் அதனை முடிந்தவரை உடனடியாக தீர்வு காண இவர்களை அணுகலாம். இந்த இரண்டு தோழிகளின் செம்மையான முயற்சியை பாராட்டி ஆதரவளிக்கலாம்.

குழந்தை வளர்ப்பில் ஏதேனும் சந்தேகமா? உதவிட கரம்கோர்க்கிறது திருச்சி பேரன்டிங் சர்க்கிள்.

https://www.facebook.com/TrichyParentingCircle/