கொரோனா நிவாரண உதவி - இளைஞர்களுக்கு காவலர் தேர்வு பயிற்சி - அசத்தும் திருச்சி ஊராட்சி மன்ற தலைவர்!

கொரோனா நிவாரண உதவி - இளைஞர்களுக்கு காவலர் தேர்வு பயிற்சி - அசத்தும் திருச்சி ஊராட்சி மன்ற தலைவர்!

அரசு வேலை என்பது கல்லூரி படித்த ஒவ்வொருவருடைய கனவு அது. 25 வயதில் ஒரு இளைஞன் தன்னுடைய வீட்டில் உள்ள கடன்களை எல்லாம் அடைத்து தான் ஒரு நல்ல வேலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எதார்த்தம் தான். அதற்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப் தேர்வுகள் மற்றும் காவலர் தேர்வு என பல தேர்வுகளில் இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சியின் முதல் ஊன்றுகோலாக இளைஞர்களுக்காக சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வை தன்னுடைய பஞ்சாயத்தில் நடத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த ஒரு பஞ்சாயத்து தலைவர்! யார் இவர்?

Advertisement

பஞ்சாயத்து தலைவர் ஆனால் போதும் மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளிக்கும் பலருக்கு மத்தியில்... இந்த இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும் அதனைத் தொடர்ந்து தற்போது இளைஞர்களுக்காக காவலர் பயிற்சி தேர்வை தன்னுடைய பஞ்சாயத்துலேயே நடத்திவரும் பஞ்சாயத்து தலைவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மண்ணச்சநல்லூர் ஒன்றிய இருங்களூர் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் எஸ்.வின்சென்ட். கொரோனா ஆரம்பமாகி 7 மாதங்களைக் கடந்து விட்டது. இந்தநிலையில் இருங்களூர் பஞ்சாயத்தில் பலருக்கு நிவாரண உதவிகளை அளித்தும், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் அளித்தும் தற்போது அரசு பணி என்னும் கனவை நோக்கி பயணிக்கும் இளைஞர்களுக்காக காவலர் பயிற்சி தேர்வுக்கு தன்னுடைய பஞ்சாயத்துலேயே வகுப்புகள் நடத்தி வருகிறார். இருங்களூர் பஞ்சாயத்து மட்டுமல்லாது, திருச்சி பெரம்பலூர் அரியலூர் என பல மாவட்டங்களில் இருந்து இருங்களூர் பஞ்சாயத்தில் வந்து இலவசமாக சீருடை தேர்வாணையம் நடத்தும் காவலர் தேர்வுக்கு பயிற்சி பெற்று செல்கின்றனர். 

இதுகுறித்து இருங்களூர் பஞ்சாயத்து தலைவர் வின்சென்டிடம் பேசினோம்...
"அரசு பணி என்பது ஒவ்வொரு இளைஞனுடைய கனவு, அதற்காக முதல் முன்னெடுக்க இளைஞர்களுக்காக இந்த முயற்சியை நாங்கள் துவங்கியுள்ளோம். கொரோனா காலகட்டத்திலும் பல நிவாரண பொருட்களை அளித்து அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு சார்பில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளிவந்தது. உடனே இதனை நம் ஊராட்சியில் இலவசமாக கற்றுக் கொடுத்தால், பல ஏழை மாணவர்களுக்கு உதவியாக இருக்குமென எண்ணி முதல் கட்டமாக பணியைத் தொடங்கினோம்.

 இருங்களூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பள்ளியில் தினமும் காலை 5.30 மணியிலிருந்து காலை 11.30 மணி வரை வகுப்புகள் நடக்கின்றன. திருச்சி பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 150 மாணவ மாணவிகள் சீருடை பணியாளர் தேர்வுக்கு தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான காலை உணவையும் நாங்களே வழங்கி வருகிறோம். இதற்காக என்னுடைய ஊராட்சியை சேர்ந்த பலர் எனக்கு உறுதுணையாக இருந்து முன்னெடுத்துச் செல்கின்றனர்.

Advertisement

காலை அவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பு அங்கு உள்ள மரத்தடியில் பயிற்சிக்கான வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக திருச்சியிலிருந்தும் பல தன்னார்வ ஆசிரியர்கள் வந்து கலந்துகொண்டு இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இந்த 150 பேருக்கு இலவச உணவும், இலவசமான பயிற்சியை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் பல ஏழை மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அடுத்ததாக டிஎன்பிஎஸ்சி மற்ற பல தேர்வுகளுக்கும் எங்கள் பஞ்சாயத்தில் வகுப்புகளை ஏற்படுத்த காத்திருக்கிறோம்" என்றார் புன்னகையுடன் பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட்..

பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட்

கோச்சிங் சென்டர் போய் படிக்க வசதியில்லாத மாணவர்கள் பலருடைய வாழ்க்கையில் இருங்களூர் பஞ்சாயத்து ஒளி விளக்கேற்றி வருங்கால வாழ்க்கைத் துணை புரிகிறது என்றால் அது மிகையாகாது!