தடகளத்தில் அசத்தும் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவி

தடகளத்தில் அசத்தும் திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவி

பெற்றோர்கள் எந்த துறையில் பணிப்புரிகிறார்களோ அவர்களுடைய குழந்தைகளும் அத்துறையில் சாதனை புரிவது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் மற்ற துறைகளை போல் அல்லாமல் விளையாட்டு துறையில் அப்படி சாதிப்பவர்கள் மிக சிலரே. அப்படி ஒட்டுமொத்த குடும்பமும் விளையாட்டு துறைக்காக தங்களை அர்பணித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் கெவினா அஸ்வினி.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்து வருகிறார். இவருடைய தந்தை அண்ணாவி சர்வதேச அளவிலான தடகள வீரராக இருந்து, தற்போது பயிற்சியாளராக ரயில்வே துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயார் சுகந்தி விளையாட்டு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெற்றோர்கள் விளையாட்டுத் துறையில் சாதித்ததை முன்னோடியாகக் கொண்டு செயல்பட்டு வரும் அஸ்வினிக்கு, அண்ணனும் வழிகாட்டியாக தான் இருந்து வருகிறார். இவருடைய அண்ணனும் ஒரு தடகள வீரர் தானாம். ஆக திருச்சியில் விளையாட்டுக்கு என்றே ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

விளையாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த அஸ்வினியை தொடர்பு கொண்ட போது விளையாட்டுத் துறை சார்ந்த அவருடைய பயணத்தை  சுவாரசியமாக நம்மோடு பகிர்ந்து கொண்டார். என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் என் பெற்றோர்கள் பயிற்சியாளராக இருந்ததால் மைதானங்களுக்கு சென்று பயிற்சியை தொடங்கி விட்டேன். என் தந்தை உயரம் தாண்டுதல் சிறந்த வீரர். இதனால் நான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி பெறத் தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை எல்லா போட்டிகளிலும் பரிசு வென்று வருகிறேன்.

மற்ற  தடகள வீரர்களுக்கு இல்லாத ஒரு சலுகை என்னவென்றால் என் பெற்றோர்களே எனக்கு பயிற்சியாளராக அமைந்தது தான். இதனால் தொடர்ந்து பயிற்சி பெறுவதில் எனக்கு எவ்வித இடையூறுகளும் இருந்தது இல்லை. விளையாட்டுத்துறை குறித்த அவர்களின்  அர்ப்பணிப்பு உணர்வும் ஆர்வமும் நானும் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்றுக்  கற்றுக்கொண்டேன். காலை எழுந்தவுடனே குடும்பமாக மைதானத்திற்கு செல்வது எங்களுடைய நாளின் தொடக்கமாய் அமையும்.

சர்வதேச அளவில் பெற்றோர்களை பெருமை சேர்க்க வேண்டும் என்று.
தொடர்ந்து பயிற்சி பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 19வது தேசிய இளையோர் தடகள போட்டியில் திருச்சியிலிருந்து கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தை வென்று உள்ளேன். ஒருநாள்கூட பயிற்சி பெறுவதற்கு விடுமுறை அளிப்பது இல்லை. போட்டிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து பயிற்சி  எடுத்துக் கொண்டே இருப்பேன்.

ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் பயிற்சி பெறுவது மிகுந்த சிரமமாக இருந்ததால் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனினும் எப்படியாவது சர்வதேச அளவில் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற விடாமுயற்சியோடு பயிற்சி செய்தேன். பெற்றோர்களின் உதவியுடன் என் கல்லூரியின் ஒத்துழைப்போடும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற பெடரேசன் கோப்பை நீளம் தாண்டுதலில் இரண்டாவது பரிசு பெற்றேன். விடாமுயற்சியோடு தொடர்ந்து பயிற்சி பெற்றுக் கொண்டே இருப்பேன் இனிவரும் காலங்களில் என் பெற்றோரின் ஒத்துழைப்போடு மிகுந்த பயிற்சி மேற்கொண்டு 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வது தான் என்னுடைய லட்சியம் என்கிறார் இந்த வீர மங்கை.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn