கப்பல்கள், படகுகளில் பொருத்தி ரிமோட் கண்ட்ரோலுடன் இரவு– பகல் எந்நேரத்திலும் எதிரிகளை துல்லியமாக தாக்க கூடிய துப்பாக்கியை திருச்சி OFT அறிமுகம்
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள படைக்கலன் தொழிற்சாலையில் (ஓ.எப்.டி.,) கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள், படகுகளில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய, 12.7 மி.மீ., ரக துப்பாக்கியை வடிவமைத்து, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா, தெர்மல்இமேஜர், லேசர் ரேஞ்ச் பைண்டருடன் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளதால், இரவு– பகல் எந்நேரத்திலும் எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணித்து துல்லியமாக தாக்க முடியும்.இஸ்ரேல் நாட்டின், எல்பிட் சிஸ்டம் நிறுவனத்திடம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட தொழில் நுட்பத்தில் இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சக குழுவினரால், திருச்சி, படைக்கலத் தொழிற்சாலையில், பரிசோதிக்கப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கி, இந்திய கடற்படை மற்றும், கடலோர காவல் படை பயன்பாட்டுக்கு , ஒப்படைக்கப்பட்டது.படைக்கலன் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் த்விவேதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், படைக்கலன் தொழிற்சாலை இயக்குனர் ஜெனரல் மற்றும் ஆணைய தலைவர் சி.எஸ். விஸ்வகர்மா, புதிய நவீன ரக ஆயுதத்தை கடற்படை ஆயுத இயக்குனர் ஜெனரல் கே.எஸ்.சி. அய்யர் என்பவரிடம் ஒப்படைத்தார்.
புதிய நவீன ரக துப்பாக்கி, கடற்படை மற்றும் கடலோர காவல் படையின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்திய கடல் வழி பாதுகாப்பு மேலும் பலப்படும்,என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH