திருச்சி என். ஐ. டி. இயக்குனராக  கண்ணபிரான் பதவியேற்பு

திருச்சி என். ஐ. டி. இயக்குனராக  கண்ணபிரான் பதவியேற்பு

என்.ஐ. டி. என அழைக்கப்படும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனராக 5 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றிய மினி ஷாஜி தாமஸ் பணிக்காலம் நிறைவு பெற்றதையொட்டி டெல்லி பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் சென்றார். அவரது சிறப்பான பணியை பாராட்டி பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் பொறுப்பு இயக்குனராக முனைவர் ஜி. கண்ணபிரான் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஐ.ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று 27.11.20 கண்ணபிரான் திருச்சி என். ஐ. டி. பொறுப்பு இயக்குனராக பதவி ஏற்றுக்கொண்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஏற்கனவே திருச்சி என்.ஐ.டி.யில் சுமார் 30 ஆண்டுகாலம் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். தற்போது இவரை திருச்சி என்‌.ஐ.டி. இயக்குனராக இந்திய அரசின் உயர்கல்வித்துறை நியமித்து உள்ளது. முனைவர் கண்ணபிரான் ஏற்கனவே திருச்சி என்.ஐ.டி.யின் பொறுப்பு இயக்குனராக கடந்த 2016-ம் ஆண்டு சிறிது காலம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் கண்ணபிரான் காமன்வெல்த் மற்றும் பிரிட்டிஷ் கல்வி மையம் ஆகியவற்றின் விருதுகளை பெற்று உள்ளார்.  திருச்சி என்.ஐ. டி. நிறுவனத்தில் இவர் பணியாற்றிய போது பல்வேறு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி உதவிகள் பெற்றுக் கொடுத்துள்ளார். முனைவர் கண்ணபிரான் கணினி பொறியியல் துறை, சைபர் கிரைம் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகியவற்றில் பல்வேறு புதுமைகளை புகுத்தி உள்ளார்.

சர்வதேச பத்திரிகைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் சம்பந்தமாக இவர் எழுதிய 70 ஆராய்ச்சி கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.மேலும்  தொழில் நிறுவனங்கள் தொழில் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான இணைப்பு பாலமாகவும் செயல்பட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn