திருச்சியில் நெல் கதிரடிக்கும் இயந்திரத்தை திருடி சென்ற இருவர் கைது.

திருச்சியில் நெல் கதிரடிக்கும் இயந்திரத்தை திருடி சென்ற இருவர் கைது.

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனூரை அடுத்த உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நெல் கதிரடிக்கும் இயந்திரத்தை வைத்து விவசாயிகளுக்கு கூலி அடிப்படையில் கதிரடிக்கும் பணி செய்து வருகிறார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சி பகுதியில் கடந்த மாதம் கதிரடிக்கும் பணிக்காக இயந்திரத்தை கொண்டு சென்றவர், பணி முடித்து அப்பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி பாலக்குறிச்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கதிரடிக்கும் இயந்திரம் காணவில்லை என வெங்கடேசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து வெங்கடேசன் பாலக்குறிச்சிக்கு சென்று இயந்திரம் குறித்து அருகில் இருந்த பகுதிகளில் தேடியுள்ளார்.

பின் வளநாடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். மேலும் திருச்சியில் உள்ள தனியார் துப்பறிவு நிறுவனத்தின் உதவியுடன் இயந்திரம் களவாடப்பட்ட இடத்திலிருந்து தெரு தெருவாக சிசிடிவி காட்சிகளை வெங்கடேசனும், துப்பறிவு நிறுவனத்தின் அதிகாரி பாலாவும் சேகரிக்கதொடங்கினர். அந்த காட்சிகளை சேகரித்து போலீஸாரிடம் அளித்துள்ளனர். அதன்பின்பும் நடவடிக்கை இல்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் தகவலறிந்து வெங்கடேசனை அழைத்து பேசிய மாவட்ட ஆட்சியர், திருச்சி மண்டல ஜ.ஜி. உதவியுடன் மணப்பாறை டி.எஸ்.பிக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மணப்பாறை டி.எஸ்.பி த.ஜனனிபிரியா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கதிரடிக்கும் இயந்திரம் தேடும்பணி முடிக்கிவிடப்பட்டது. இந்நிலையில் பாடாலூர் வனப்பகுதியில் கதிரடிக்கும் இயந்திரம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதிக்கு சென்ற தனிப்படை போலீஸார், இயந்திரத்தை மீட்டனர்.

பின் இயந்திரத்தை திருடி சென்ற தொண்டாமாந்துரையை சேர்ந்த சின்ராசு மற்றும் அரும்பாவூரை சேர்ந்த ரவிந்திரன் ஆகியோர் கைது செய்தனர். இயந்திரம் வளநாடு காவல்நிலையம் கொண்டு வரப்பட்டது. கைது செய்யப்பட்ட சின்ராசு, ரவிந்திரன் குற்றவியல் நடுவர் கருப்பசாமி முன் ஆஜர்ப்படுத்தினர். செப்டம்பர் 21 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இருவரும் லால்குடி கிளைச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn