கோயிலுக்கு சென்ற வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி -9 பேர் படுகாயம்
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலை பனையபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் டாடா ஏஸ் வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் சென்ற 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அண்ணாநகரைச் சேர்ந்த சத்யாநந்தன் அவரது உறவினர்கள் என 11 பேர் டாடா ஏஸ் வாகனம் மூலம் கும்பகோணத்திலிருந்து கல்லணை வழியாக மணப்பாறை அருகே வளநாடு பகுதி கோயில்பட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த லாரி டிரைவர் மஞ்சுநாதன் டிப்பர் லாரியில் கரூரிலிருந்து கும்பகோணம் சுவாமி மலை பகுதிக்கு எம். சேண்டு மணல் ஏற்றி வந்து கொண்டிருந்தார்.இந்நிலையில் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலை பனையபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் எதிரே லாரி வந்தபோது கோயிலுக்கு சென்ற டாடா ஏஸ் வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக விபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய கும்பகோணம் அண்ணா நகரைச் சேர்ந்த டாட்டா ஏஸ் டிரைவர் கலையரசன் (37), துர்கா(30), சத்யானந்தனம் ( 36),முருகேசன்(58), பாப்பாயி (55),ஐஸ்வர்யா(32), சித்ரா(34), சென்னை பூந்தமல்லி சேர்ந்த அச்சுதா (10),ஸ்ரீஹரி (5) ஆகியோர்களை மீட்டு கிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கும்பகோணம் அண்ணாநகரைச் சேர்ந்த சத்தியானந்தம் மனைவி சூர்யா (34), கணேசன் மனைவி லட்சுமி (53) ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான2 பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டாடா ஏஸ் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி கல்லணை சாலையில் உள்ள காட்டு வாய்க்கால் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய..