வைகுண்ட ஏகாதசி பெருவிழா - பகல் பத்து உற்சவம் தொடக்கம்

வைகுண்ட ஏகாதசி பெருவிழா - பகல் பத்து உற்சவம் தொடக்கம்

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. பகல்பத்து, ராபத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று (22.12.2022) (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பகல் பத்து முதல் நாளான இன்று நம்பெருமாள் (உற்சவர்) நீள்முடிகிரீடம், ரத்தின காதுகாப்பு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து காலை 05.30 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்து அர்ஜுன மண்டபத்தில் நாள் முழுவதும் வீற்றிருப்பார்.

அப்போது அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர். இரவு அர்ஜுன மண்டபத்தில் இருந்து 7 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு மீண்டும் மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை  தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமப்பது வாசல் திறப்பு ஜனவரி மாதம் (02.01.2023) இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக (01.01.2023) அன்று நம்பெருமான் நாச்சியார் திருக்கோலத்தில்  புறப்பாடும் நடைபெறும். வருகிற ஜனவரி 12ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன்  வைகுண்ட ஏகாதசி பெருவிழா இனிதே நிறைவடைகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO