விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்படுவதையொட்டி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு - திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்படுவதையொட்டி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு - திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி
திருச்சி மாநகரில் 282 சிலைகள் உட்பட திருச்சி மாவட்டம் முழுவதும் சுமார் 1500 விநாயகர் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். இன்று மாலை திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி காவல் துறையினர் தங்களது பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

விரிவான பாதுகாப்பு வரைவு திட்டத்தின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், ஒரு கூடுதல் காவல் துணை ஆணையர், 9 காவல் உதவி ஆணையர்கள், 37 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட மொத்தம் 1850 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திடவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோசங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது எனவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி மாநகருக்குள் காவிரி பாலம் வழியாக பேருந்துகள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக பால்பண்ணை மற்றும் டிவிஎஸ் டோல்கேட் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு மாநகர் மற்றும் புறநகர் பேருந்துகள் வந்தடையும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அமைதியான முறையில் நிகழ்ச்சி நடைபெற காவல்துறையினர் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision