திருச்சி பூங்காவில் விற்கும் அப்பளம் கழிப்பிட வாசலில் காயும் அவலம்- கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்புத்துறை
கோடைகால விடுமுறை தற்பொழுது துவங்கியுள்ளது. இந்த நிலையில் கடுமையான வெப்பம் திருச்சியில் வீசுவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் குழந்தைகளுடன் எங்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாலை நேரங்களில் அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமே இல்லாத நிலையில் பூங்காக்களில் மட்டுமே குடும்பத்தினருடன் பொழுதைப் போக்க செல்கின்றனர்.
மாநகராட்சியால் பல்வேறு பூங்காக்கள் மாநகப் பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மேல அரண் சாலையில் உள்ள இப்ராஹிம் பூங்கா பொதுமக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதால் வருகை தருகின்றனர். அங்கு வரும் பொழுது குழந்தைகள் சிற்றுண்டிகள் பெற்றோர்களுடன் உறவினர்களுடன் உண்டு மகிழ்கின்றனர். அங்கே ஒரு அப்பளம் கடை ஒன்று உள்ளது. அதில் பலர் அப்பளத்தை வாங்கி ருசித்து சாப்பிடுகின்றனர்.
ஆனால் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த அப்பளம் காய வைக்கப்படும் இடம் பூங்கா கழிப்பிட வாசலில் என்பது அதிர்ச்சியான தகவல். பகல் நேரங்களில் கழிப்பிட வாசலில் துணியை விரித்து அப்பளத்தை ஒருவர் காய வைக்கிறார். எந்தவித சுகாதாரம் இன்றி இந்த அப்பளம் தயாரிக்கப்படுவது வீடியோ வெளியானதில் இருந்து உறுதியாகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் அந்த பூங்காவிற்கு வரும் நிலையில் தரமான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
தற்பொழுது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் சோதனை குறைந்துள்ளது. வெப்ப அலை வீசி வரும் நிலையில் ஏற்கனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொழுதுபோக்கு வரும் பூங்காக்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் அப்பளம் போன்ற உணவு வகைகளும் விற்கப்படுவதால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவார்களா? என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision