திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் மாசு - ஆய்வு அறிக்கை கொடுத்த மீன் வளத்துறை அதிகாரிகள்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் 5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. என்.எஸ்.பி., ரோடு, நந்தி கோவில் தெரு போன்ற வணிக வளாகங்களும், மக்கள் நெருக்கமும் அதிகம் மிகுந்த பகுதியில் இந்த தெப்பக் குளம் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெப்பக் குளத்தில் மாநகராட்சி நிர்வாகம் 5 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு வேலி அமைத்து பராமரிப்பு பணிகளும் மேற்கொண்டது.
தற்போது தண்ணீர் நிரம்பியுள்ள இந்த தெப்பக்குளத்தில் கடந்த வாரம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. தகவல் அறிந்த அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குளத்தை பார்வையிட்டு, பணியாளர்களை வைது இறந்து கிடந்த மீன்களை அப்புறப்படுத்தினர். மேலும் குளத்தில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழிவுகளையும் அகற்றி, வெளியேற்றினர். மறுநாளும் மீன்கள் செத்து மிதந்ததால் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரில் நச்சு கலந்திருக்கலாம் என்று பொது மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
அதனால் மீன் வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். தண்ணீரை ஆய்வு செய்து கிடைத்த அறிக்கையை மீன் வளத்துறை அதிகாரிகள் அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளனர். அதில் தண்ணீரில் உணவுக் கழிவுகளும், எண்ணெய் தன்மையும் அதிகம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புகளின் கழிவுகள் கலக்காமல் தெப்பக்குளத்தை பாதுகாத்தால், மீன்கள் இறப்பதை தடுக்கலாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து, தெப்பக்குளத்தை அழகுபடுத்திய மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை துாய்மையாக வைத்து மீன்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn