சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய செவாலியர் பட்டத்தை மோடிக்கு வழங்கி இருப்பார் - திருச்சியில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய செவாலியர் பட்டத்தை மோடிக்கு வழங்கி இருப்பார் - திருச்சியில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தமிழக அரசு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறது. நல்லரசை அங்கீகரிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். குடியரசு தின விழாவில் தமிழ்நாடு  ஊர்தி, மேற்கு வங்க ஊர்தி, கேரளா ஊர்தி அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

மேற்கு வங்க ஊர்த்தியில் சுபாஷ் சந்திரபோஸ் உருவம் இருந்ததை அங்கீகரிக்காத மோடி டெல்லியில் அவர் பிறந்த நாளின் போது அவருக்கு சிலை அமைக்கும் நிகழ்ச்சியில் பணிவாக பேசினார். சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய செவாலியர் பட்டத்தை மோடிக்கு வழங்கி இருப்பார். அப்படியொரு நல்ல பிரதமர் அமைந்திருக்கிறார். மத்திய அரசின் அமைச்சர்கள் பல்வேறு ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு சர்வாதிகார பாஸிச அரசாக இருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளார்கள் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும். ஒகேனக்கல் 2 வது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது  மனித தன்மையற்றது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தில் தமிழக முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த பிரச்சினை மட்டுமல்ல அனைத்து பிரச்சனைகளையும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கலாம். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அதை ஏலம் விடப்போகிறோம் என அறிவித்துள்ளது. இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு  மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள்.

சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். படகுகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.கவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம். தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.

காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளை தங்கள் கட்சியில் பா.ஜ.க வின்ர் இணைத்து வருகிறார்கள். சிறிய பிரச்சனையை மதப்பிரச்சனையாக்கி அரசியல் ஆதாயம் தேடலாம் என பா.ஜ.க முயற்சி செய்கிறது. ஆனால் அவ்வாறெல்லாம் அவர்களால் வெற்றி பெற முடியாது. எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இதை சட்டம் போட்டெல்லாம் தடுக்க முடியாது. 

எத்தனை மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் அதை அழிக்க தான் பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மதவாத அரசியல் வெற்றி பெறாது. தமிழகத்தில் நீட் தேர்வினால் 25 மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள் அது குறித்தெல்லாம் அண்ணாமலையின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு பா.ஜ.க வினர் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் விரும்புகிறார்களா அல்லது ஒருவருக்கொருவர் மோதி கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களா என்பதை விளக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிதி போதாது. கூடுதலாக வழங்க வேண்டும். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு சார்பில் உயர்மட்ட குழு வந்து பார்வையிட்டார்கள். ஆனால் தற்போது அது என்ன ஆனது என்பது தெரியவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒத்த ரூபாய் கூட அவர்கள் வழங்கவில்லை. குஜராத்தில் பாதிப்பு என்றால் துடித்து போகும் மோடி தமிழ்நாட்டிற்கு பாதிப்பு என்றால் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn