விவசாயிகளை போற்றுவோம்” விவசாயிகள் தின சிறப்பு கட்டுரை:

விவசாயிகளை போற்றுவோம்” விவசாயிகள் தின சிறப்பு கட்டுரை:

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” (குறள்) – எனச் சங்ககாலம் தொட்டு இக்காலம் வரையிலும் உழவர்கள் மற்றும் உழவின் பெருமையைப் பாடுகிறோம். உழவுத் தொழில்தான் உலகின் அனைத்து தொழில்களிலும் சிறந்தது. “உண்டிக் கொடுத்தோர்; உயிர் கொடுத்தோரே” என உழவர்களைச் சிறப்பிக்க நாம் தவறியதில்லை. இன்று வரை நம் மனதில் விவசாயிகள் பற்றிய உயர்ந்த எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஆனால், இவையெல்லாம் செயலாக அல்லாமல், சொல்லாக மட்டுமே குறுகி நிற்கின்றன. இன்று உலக விவசாயிகள் தினம்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம். நாகரிக வளர்ச்சியில் 2G, 3G, 4G, 5G என வளர்ந்துக்கொண்டு சென்றாலும் உணவு என்றால் கஞ்சி(யை) தான் நாட வேண்டும்.மறைந்த இந்திய பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதையும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் தேசிய விவசாயிகள் தினத்தன்று அரசு விடுமுறை. 

Advertisement

விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்களின் போராட்டம் தலை தூக்கும் போதெல்லாம் பதவியேற்கும் புதிய அரசு ‘விவசாய கடனை’ தள்ளுபடி செய்துவிட்டு பிரச்னையை தீர்த்துவிட்டதாகப் பெருமை கொண்டுவிடுகிறார்கள். கடன் தள்ளுபடி அவசியமே; ஆனால், அது நிவாரணம் மட்டுமே. நிரந்தர தீர்வென்பது ‘நியாயமான கொள்முதல் விலை’ நிர்ணயித்து அரசே அதிகளவில் கொள்முதல் செய்வதே. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதையே முழங்குவது எனத் தெரியவில்லை.

8 வழிச்சாலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய மண்டலம் என விவசாய நிலங்களைக் கூறு போடாமல் காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலங்களாக அறிவித்து, விவசாய நிலங்களைக் கபளீகரம் செய்யும் திட்டங்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும். தொலைநோக்கு பார்வையிலான சிறப்பான திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தால் இருப்பதைக் காக்கலாம்; இழந்ததை மீட்கலாம்.

திருச்சியில் விவசாயிகள் தினம்:

உழவர் பெருமக்களை சிறப்பிக்கும் வகையில் தேசிய உழவர் தின விழா தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் திருச்சியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான், அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ், விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தனபால், தமிழ்நாடு டெல்டா விளைபொருள் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மகாதனபுரம் ராஜாராம், தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
வேளாண்மை குறித்த பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.


இருந்தோம்பி இல்வாழ்வு எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.”