திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை வருமா வராதா? - சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு

திருச்சி பழைய பால்பண்னை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு 4 வழிச்சாலை அமைத்த போது 4 வழிச்சாலை விதிகளை மீறி அனுகுச் சாலை (சர்வீஸ்) அமைக்காமல் மேற்கண்ட 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது
சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான தெருக்கள் நேரிடையாக அதிவேக 4 வழி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதாலும் BHEL, OFT , HAPP தொழிற்சாலைகள் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் என இந்த சாலையை தினமும் ஆயிரகணக்கானோர் கடந்து செல்வதாலும் ஏராளமான விபத்துக்கள் நடக்கும் சாலையாக மாறியுள்ளது.இதுவரை இந்த சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்களில் சுமார் 1500 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
பலர் நிரந்தர ஊனமாகியுள்ளனர் அவர்களது குடும்பம் வருமானம் இன்றி அவதிபடுகிறது.எனவே இப்பகுதி மக்கள் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு மேற்கண்ட அனுகுச் சாலையை சாலையின் இருபுறமும் உடனடியாக அமைக்க வேண்டும் அதற்கு மாநில அரசு நிலங்களை கையகப் படுத்த வேண்டும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைத்துத்தர வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது மேலும் சில வியாபாரிகள் பெற்ற தடை ஆணைகளும் தள்ளுபடி செய்யப்பட்டது
சர்வீஸ் சாலை உள்ளிட்ட சாலையின் மொத்த அகலம் 45 மீட்டர் என்றும் பேருந்து நிறுத்தங்களில் 50 மீட்டர் என்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ள இடங்களில் 60 மீட்டர் எனறும் 2019 ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக மாநில அரசு காலதாமதம் செய்து இழுத்தடித்தது மட்டுமல்லாமல் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்றெல்லாம் தற்போதய மாநில அரசால் 2021ல் அறிவிக்கப்பட்டது.இறுதியில் சர்வீஸ் சாலை மீட்புக் குழுவின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனு செய்ததில் அதன் மீது நீதிமன்ற உத்திரவு வழங்கப்பட்டது.அதில் தமிழக அரசு உடனடியாக அளவீடு செய்து நிலம் கையகப்படுத்திட வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அணுகுச்சாலையை அமைத்துத்தர வேண்டுமெனவும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து 6 வாரங்களுக்கு ஒரு முறை மதுரை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்திரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 6/3/2025 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 45 மீட்டர் சாலையின் அகலத்தை 33 மீட்டர் என அளவை குறைத்து நிலம் கையகப்படுத்த போகிறோம் என கூறியுள்ளது.இதனால் இப்பகுதி மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்திட ஏற்கனவே திட்டத்தில் இருக்கும் பேருந்து நிறுத்த இட வசதி நிழற்குடை மற்றும் சாலையை கடக்க அமைக்கப்படவிருந்த 5 மேம்பாலங்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் கைவிடும் நிலை இருக்கிறது.தமிழக அரசின் இந்த செயல் பொதுமக்களை பற்றி எந்த அக்கரையும் இல்லாமல் ஒரு சில கட்டிட உரிமையாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயும் அனுகுச் சாலை யை அமைக்காமல் இழுத்தடிப்பு செய்து சிக்கலாக்கி விடுவதற்கான திட்டமாகவே தெரிகிறது.
மேலும் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வரும் அப்பகுதி மக்களை உதாசினப் படுத்தும் செயலாகும்.பல கட்ட ஆலோசனை விசாரனைக்கு பிறகு வழங்கப்பட்ட 2019ம் ஆண்டின் மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறுவதாகும்.45 மீட்டரை 33 மீட்டராக குறைப்பது என்பது அந்த பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசலையும் விபத்துக்களையும் ஏற்படுத்துவதாகும்.திட்டம் அறிவிக்கப்பட்டு 10 வருடம் ஆன நிலையில் இந்த சாலையில் போக்குவரத்து மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
எனவே தமிழக அரசு தற்போது அளவை குறைத்து மதுரைஉயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெற்று உடனடியாக அணுகுச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கிடக் கோரிக்கையை முன்வைத்து வருகின்ற 17/3/2025 திங்கள் அன்று காலை 10 மணிக்கு காட்டூர் கைலாஷ் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் திருச்சி தஞ்சை சாலையில் பொதுமக்களால் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷம் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision