உலக தண்ணீர் தினம்: பங்கேற்பு பாசன மேலாண்மை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு

உலக தண்ணீர் தினம்:பங்கேற்பு பாசன மேலாண்மைகுறித்த மாநில அளவிலான கருத்தரங்குதிருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், உலக தண்ணீர் தினத்தை (மார்ச் 22) முன்னிட்டு, பங்கேற்பு பாசன மேலாண்மை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கை, உலக வங்கி நிதியுதவியுடன் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், சென்னையுடன் இணைந்து பயிற்சி நிலைய கலையரங்கில் இன்று (22.03.2025) சனிக்கிழமை நடத்தியது.
'பங்கேற்பு பாசன மேலாண்மையில் குறிக்கோளை அடைவதிலும் அதன் மூலம் நீரைச் சேமிப்பதிலும் நடைமுறைகளைச் செயல்படுத்துதல்" என்னும் கருப்பொருளில் நடந்த மாநில அளவிலான கருத்தரங்கு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.நிகழ்ச்சிக்கு பாசன மேலாண்மை பயிற்சி நிலைய தலைமைப் பொறியாளர் (ம) தலைமை இயக்குநர் பொறி.ஆர். தயாளகுமார் அவர்கள் தலைமை தாங்கிப் பேசுகையில், உலகின் மொத்தத் தண்ணீர் இருப்பில் 1 சதவீதம் மட்டுமே நாம் பயன்படுத்தக்கூடிய நன்னீர் உள்ளது. எனினும், அதன் முக்கியத்துவத்தை உணராமல் நாம் தண்ணீரை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார். மூன்றாவது உலகப்போர், நிச்சயமாக தண்ணீருக்காகவே நடக்கும் என்பதாக உலக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். எனவே நம்மிடம் உள்ள நன்னீரைச் சேமித்துப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும் என்று நீர் சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.தொடர்ந்து, நீர்வளத்துறை முன்னாள் சிறப்புத் தலைமைப் பொறியாளர் மற்றும் பங்கேற்பு பாசன மேலாண்மை ஆலோசகர் பொறி.கே.நாகராஜன் அவர்கள் பங்கேற்பு பாசன மேலாண்மை குறித்து பேசுகையில், 'புவியியல் மற்றும் பருவநிலை மாற்றங்களால், தமிழ்நாட்டில் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு போதுமான அளவு இருப்பினும், பயன்பாட்டிற்குத் தேவையான நீர், நமக்குத் தட்டுப்பாடாகவே உள்ளது.
நிலத்தடியில் 73 சதவீதம் பாறைகளும், 27 சதவீதம் மட்டுமே மணல் அமைப்பும் கொண்டிருக்கின்றது. எனவே, நாம் முழுதாக நிலத்தடி நீரை நம்பியிருக்க முடியாது. வருடந்தோறும், வடகிழக்கு பருவமழை குறுகிய காலத்தில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி சேதங்களை ஏற்படுத்துகிறது. எனவே, அத்தகைய இழப்புகளைத் தவிர்ப்பதற்கும், வீணாகக் கடலில் கலக்கும் நீரைச் சேமிப்பதற்கும் நீர் மேலாண்மைக்குரிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.இதுமட்டுமின்றி, மக்கள் தொகை அதிகரிப்பு, மாசுபாடு, தொழிற்துறை வளர்ச்சி போன்றவற்றாலும் நீர்த்தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் புவியியல் நிலவரத்தின்படி, நீர்ப் பற்றாக்குறையை நிர்வகிக்க கூடுதல் நீர்வள ஆதார அமைப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.
நீர் சேமிப்புக்குரிய மாற்றுவழியை உருவாக்குவதே இதற்குத் தீர்வாகும். அந்த வகையில், நீர் மேலாண்மையில் 'பங்கேற்பு பாசன மேலாண்மை" முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் 95 சதவீத மேற்பரப்பு நீரும் 81 சதவீத நிலத்தடி நீரும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பதால், நீர் மேலாண்மையில் அனைத்து தரப்பினரும் அக்கறையுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டுமே திறன்மிக்க மற்றும் பயனுள்ள நீர் மேலாண்மையைச் சாத்தியமாக்க முடியும் என்பதாக, பங்கேற்பு பாசன மேலாண்மை குறித்த தமது சொற்பொழிவில் பொறி.கே.நாகராஜன் அவர்கள் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட நீர்வள மேலாண்மை நிபுணர் முனைவர் ஆர்.கிருஷ்ணன் அவர்கள், 'தமிழ்நாடு விவசாயிகள் பாசன அமைப்புகள் மேலாண்மைச் சட்டம், 2000" என்ற தலைப்பில் விரிவான உரை நிகழ்த்தும்போது, தமிழ்நாட்டில், உலக வங்கி நிதியுதவியுடன் 5000-க்கும் மேற்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்கள் (WUAs) உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கருத்தரங்கின் முக்கியப் பகுதியாக, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு இடையே 4 முக்கிய அம்சங்களின் அடிப்படையில், குழு விவாதங்கள் நடத்தப்பட்டு, செயல்திட்டங்களுக்கான வரைவுகள் தீர்வுகளாக எட்டப்பட்டன.
'நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள், நீர்மேலாண்மையின் செயல்பாடு மற்றும் பராமரிப்பில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் பங்கு, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் பணிகள் மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு, மற்றும் நிதி வழங்குதல், நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் தேவையான பயிற்கள் வழங்கும் முறைகள்" ஆகிய பொருண்மைகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்கள், குழு விவாதங்களின் மூலம் இறுதிசெய்யப்பட்ட பரிந்துரைகள் குறித்த விளக்கவுரைகளை வழங்கினார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எம். பிரதீப் குமார் அவர்கள் தமது சிறப்புரையில், பண்டைய தமிழ் மன்னர்கள் நீர் மேலாண்மையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதைப் பாராட்டினார். அதேசமயம், நிகழ்காலத்திற்கேற்ற புதிய தொழில்நுட்பங்களை பாசன மேலாண்மையில் நாம் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார். செயற்கை உரமில்லா இயற்கை வேளாண்மை இயக்கத்தின் முன்னோடி நம்மாழ்வாரின் சேவைகள் குறித்தும் பாராட்டிப் பேசினார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இக்கருத்தரங்கின் வாயிலாக, நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தினர், நீர் சேமிப்பில் அனைவரும் பங்காற்ற உறுதியேற்குமாறும் கேட்டுக் கொண்டார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வேளாண் வணிக நிபுணரும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டத்தின் உலக வங்கி பணிக்குழுத் தலைவருமான திரு. பார்பாடு யூசுபி அவர்கள் தமது சிறப்புரையில், பற்றாக்குறையான நீரினைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களில் இருந்து மீள்வதற்கான நீர் மேலாண்மையில் விவசாயிகள் முக்கியப் பங்காற்ற வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார். மேலும், நிலையற்ற பருவநிலை காரணமாக விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேர்த்தியான நன்னெறி வேளாண் நடைமுறைகளை, தங்களது விவசாயத்தில் அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
கருத்தரங்கின் நிறைவுரையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட இயக்குநருமான தென்காசி சு ஜவகர் அவர்கள், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்டம், நீர்வள ஆதாரத்துடன் தொடர்புடைய ஏழு துறைகள் மற்றும் மூன்று பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, அதன் பயனாக தமிழக நீர்வளத்துறை 'நீர் மேலாண்மைக்கான தேசிய விருதைப்" பெற்றதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று தெரிவித்தார். நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மாநில அளவிலான கருத்தரங்கில், நீர்வளத்துறையின் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர்களும், பிரதிநிதிகளும், விவசாயிகளும், 50க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை பொறியாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, நீர்வளத்துறை மண்டலங்களின் சார்பிலும், வேளாண் வணிகத்துறை சார்பிலும் காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை இயக்குநர் (பயிற்சி) இலக்குவ பூபதி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்குதல் திட்ட கண்காணிப்புப் பொறியாளர் பொறி. பழனியம்மாள் அவர்கள், அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சியில் பாசன மேலாண்மை பயிற்சி நிலைய பேராசிரியர், வேளாண் இணை இயக்குநர் திருமதி லட்சுமி பிரபா முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியை, வேளாண்மை துணை இயக்குநரும் பயிற்சி நிலைய இணைப் பேராசிரியரான சி. இராஜேஸ்வரி, நீர்வளத்துறை உதவிப் பொறியாளர்கள் ஜென்சி கிறிஸ்டி, ஹெப்சிபா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பாசன மேலாண்மை பயிற்சி நிலைய இணை இயக்குநர் (பயிற்சி) பொறி. இலக்குவ பூபதி அவர்கள் தலைமையில், இணைப் பேராசிரியர்களும் நீர்வளத்துறை செயற்பொறியாளர்களுமான பொறி.நா.இரமேஷ், பொறி.அக்பர் அலி, பொறி.அருள்குமரன் ஆகியோர் கண்காணிப்பில், பாசன மேலாண்மை பயிற்சி நிலைய உதவிப் பேராசிரியர்கள், இணை ஆராய்ச்சியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision