கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் அருள்பணி G.சாமிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ப. நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம.இராஜகுமாரி பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

அவர்தம் சிறப்புரையில்... பெண்கள் எதை இழந்தாலும் துணிச்சலை இழந்துவிடக் கூடாது என்றார். அச்சந்தவிர் என்பது போலவே துச்சம் எதிர் என்றார். துச்சம் கண்டு அச்சமின்றி எதிர்கொள்ள அறிவை பெருக்கி ஆற்றலை வளர்த்து சமூக ஆக்கத்தில் சிறந்து விளங்கும் தன்மை பெண்களுக்கு வேண்டுமென்றார். வறுமைநிலை கண்டு துயரமின்றி அயராத கடின உழைப்புடன் முன்னேறும் மன வலிமை பெண்களுக்கு உண்டு. உலகின் தலைசிறந்த சாதனைப் பெண்கள் சாதனைகளை கொண்டாடுவது மட்டும் பெண்கள் தினமாகாது. நம்மைச் சுற்றிலும் வாழும் அன்றாடம் உழைக்கும் பெண்கள், சாலையோரங்களில் சிறு சிறு வியாபாரம் செய்யும் வயதான பாட்டிகள் அவர்களின் மனவலிமையை போற்றவேண்டும் என்றார். பெண்கள், பெண் குழந்தைகள் வீட்டை விட்டு கிளம்பும்போதும் வீடு திரும்பிடும் உள்ள சமூக அச்சம் குறைந்திட ஆண் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும், பெண்களின் உணர்வை மதித்து அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கிட ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தருதல் அவசியம் என்றார்.

அதனைத் தொடர்ந்து கிராமாலயா அமைப்பின் இயக்குநர் பிரித்தா தாமோதரன் பெண்கள் தினத்தில் மாத விடாய் சுகாதாரம் குறித்து அவசியம் பேச வேண்டும், உடல் சுழற்சி குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார். நிலவோடு பெண்ணுடலை ஒப்பிட்டு மாதவிடாய் சுழற்சி குறித்து சிறப்பாக விளக்கினார். அதனைத் தொடர்ந்து கிராமாலயா அமைப்பின் திருமதி சரோஜா அவர்கள் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின் பொருளில் உள்ள ரசாயன நச்சுகளை குறித்து அவை ஏற்படுத்தும் உடல் உபாதைகள் குறித்து விளக்கினார். நவீன நாப்கின் சாதனம் பயன்படுத்தும் போது ஏற்படும் தீங்குகள் தவிர்த்திட துணியாடை பயன்படுத்தி உடல் சுகாதாரம் மற்றும் சூழல் சுகாதாரம் காக்க வேண்டும் என்றார். மாதவிடாய் சுகாதாரம் குறித்து குடும்பத்தில் தொடங்கி சமூகத்திலும் தயக்கமின்றி பேசிடவும் உடல்நலம் காத்திட முன் வருதல் வேண்டும் என்றார்.

நிகழ்வில் வரவேற்புரை இசைத்துறைத் தலைவர் முனைவர் உமாமகேஸ்வரி ஆற்றினார். நடனத்துறை தலைவர் முனைவர் சாராள் நன்றியுரையாற்றினார். நிகழ்வை பாலின மன்ற ஒருங்கிணைப்பாளார் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் ஒருங்கிணைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO