காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து திருச்சியில் அணு விஞ்ஞானி நேரில் ஆய்வு

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது குறித்து திருச்சியில் அணு விஞ்ஞானி நேரில் ஆய்வு

திருச்சி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவைக்காகவும் காவிரி ஆறு பயன்படுகிறது. திருச்சி மாநகரத்தின் வழியாக பயணிக்கும் காவிரி ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலந்து காவிரியை மாசுப்படுத்தி வருகிறது. மேலும், திருச்சி மாநகரத்திற்குள் ஓடும் உய்யகொண்டான் வாய்க்கால், அரியாறு, கோரையாறு குடமுருட்டி ஆறுகளிலும் கழிவுநீர் கலந்து வருகின்றன. இதனால் குடிநீர் மாசடைவதோடு நிலத்தடி நீரும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர மாநகரத்தில் குவியும் குப்பைகள், ஓட்டல் கழிவுகள் உள்ளிட்ட திடக்கழிவுகள், மாநகரத்தின் சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக விளங்கி வருகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் வேண்டுகோளை ஏற்று சென்னையை சேர்ந்த அணு விஞ்ஞானி பேராசிரியர் டேனியல் செல்லப்பா நேற்று திருச்சிக்கு வந்து முதல் கட்ட ஆய்வு பணிகளை தொடங்கினார். முன்னதாக திருச்சி மேலச்சிந்தாமணி மற்றும் காவிரி உள்ளிட்ட நீர் நிலைகளில் கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரில் பார்வையிட்டார். மேலும், திடக்கழிவுகள் சேகரிக்கப்படும் இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். காவிரி ஆறு மற்றும் மாநகர பகுதிகளில் காந்தி மார்க்கெட் காய்கறி பழங்கள் மார்க்கெட், வாழைக்காய் மண்டி, ஆடுவதை கூடம் மற்றும் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.

அப்போது, காய்கறி மற்றும் பழங்கள் கழிவுகள் மற்றும் வாழைக்காய், இலை மற்றும் ஆடு வதை கூடங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, அதில் இருந்து உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை எரிவாயு சேகரிப்பது குறித்து ஆய்வு நடத்தினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, திருச்சி மாநகரத்திற்கு காவிரி ஆறு என்பது மிகப்பெரிய வரம். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டியது நமது அனைவரின் மிகப்பெரிய கடமையாகும். வருங்கால சமுதாயத்திற்கு இந்த ஆற்றை நல்லபடியாக பாதுகாத்து கொடுக்க வேண்டும். எனவே, காவிரி உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும், அந்த கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்துள்ளேன். இதுகுறித்த விரிவான அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும், மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 5-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO