திருச்சி அருகே காவிரி ஆற்றில் மீன் பிடித்த வாலிபர் புதைமணலில் சிக்கி உயிரிழப்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மீன் பிடித்த வாலிபர் புதைமணலில் சிக்கி உயிரிழப்பு

முசிறி அருகே அய்யம்பாளையத்தில் மீன்பிடித்த போது புதைமணலில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முசிறி அருகே வடக்கு திரணியாம்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் ஜோன். இவரது மருமகன் விவசாயி கார்த்திக் ராஜா (35) என்பவர் பரமத்தி வேலூரில் இருந்து விடுமுறைக்காக திரணியாம்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஜோன் தனது மருமகன் கார்த்திக்ராஜா, மகன் ராஜன், உறவினர் விஜயகுமார் ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அய்யம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக காவிரி ஆற்றில் இருந்த புதைமணலில் சிக்கி கார்த்திக்ராஜா தவித்துள்ளார். ஜோன் உறவினருடன் சேர்ந்து மருமகனை காப்பாற்ற முயன்று உள்ளார். இதில் கார்த்திக்ராஜா நீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து ஜோன் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் வழக்கு பதிந்து முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் உதவியுடன் காவிரியாற்றில் கார்த்திக்ராஜாவை தீவிரமாக தேடினர். கார்த்திக் ராஜா ஆற்றில் மூழ்கிய இடத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து போலீசார் மீட்கப்பட்ட சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.