வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை பெற்று தந்த திருச்சி எம்.பி

வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை பெற்று தந்த திருச்சி எம்.பி

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாவின் கணவர் முருகேசன் நாராயணசாமி கத்தார் நாட்டில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி இரவு மறைந்தார். அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப போதிய ஒத்துழைப்பை முருகேசன் பணிபுரிந்த நிறுவனம் தராததால் முருகேசனின் மனைவி சசிகலா, மதிமுக ஒன்றியச் செயலாளர் சகோதரர் வைரமூர்த்தியிடம் தெரிவித்து முருகேசன் உடலை பெற்று தரும்படி உதவி கேட்டுள்ளார்.

இந்தத் தகவலை புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர். அவர் கடந்த 27ஆம் தேதி காலை இதுபற்றி துரை வைகோ எம்பி அவர்களிடம் தெரிவித்திருந்தார். துரை வைகோ எம்பி இந்தத் தகவலை உடனே கத்தாரில் இருக்கும் மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ்-வை தொடர்பு கொண்டு முருகேசன் உடலை விரைவாக இந்திய கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கத்தார் அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்று பின்பு கத்தாரில் இருக்கும் இந்திய தூதரகத்தின் ஒப்புதலை பெற்று இரண்டு நாட்களுக்குள் அனைத்து அரசாங்க வேலைகளையும் முடித்து முருகேசனின் உடல் சென்னை வந்தடைந்தது. 

முருகேசன் உடலை கொண்டு வர அவரது நிறுவனம் போதிய ஒத்துழைப்பை தராததால் முழு செலவையும் ஏற்று முருகேசன் உடலை இந்தியா கொண்டு வர பெரும் உதவியாய் இருந்த தொழில் அதிபர் சையத் யாசிர் நைனார், கத்தார் தமிழ் சங்கத்தின் செயலாளர் மணி பாரதி, மதிமுக இணையதள அணி ஒருங்கினைப்பாளர் மினர்வா ராஜேஷ் ஆகியோருக்கு துரை வைகோ எம்.பி நன்றியைத் தெரிவித்து கொண்டார்.

மேலும், குவைத் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான சமூக ஆர்வலர் மதி உதவியால் சென்னையில் இருந்து முருகேசன் உடல் சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அதற்காக, சமூக ஆர்வலர் மதிக்கு துரை வைகோ எம்பி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதேப்போல, குவைத் நாட்டில் இறந்த ஒருவரின் உடலை சொந்த ஊரான திருச்சிக்கும், இலங்கையில் இறந்த ஒருவரின் உடலை கொண்டுவர அந்நாட்டு மதிப்பில் 8 இலட்சம் ரூபாய் கேட்ட நிலையில் சொந்த ஊரான தஞ்சைக்கும் கொண்டுவர துரை வைகோ எம்.பி முயற்சி எடுத்து அவர்களின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தன. மறைந்த முருகேசன் அவர்களோடு சேர்த்து இந்த ஒரு மாதத்தில் மட்டும் துரை வைகோ எம்பி முயற்சியால் மூன்று தமிழர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சக மனிதனின் கண்ணீரை துடைக்கின்ற இந்தப் பணிகளை உணர்வுப் பூர்வமாகவும், அவர்களின் துயர நிலையை உணர்ந்தும் விரைவான முயற்சிகள் எடுத்தாக துரை வைகோ எம்பி தனது சமூக வலைதள பதவில் குறிப்பிட்டுள்ளார்.