வீடு தேடி வந்து ஆக்சிஜன் அளவு ,வைட்டமின் மாத்திரை,கபசுர குடிநீர் வழங்கும் திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க அனைத்து வீடுகளிலும் உள்ள நபர்களுக்கு வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்ஸிஜன் அளவினை கண்டறியும் பரிசோதனையினை மேற்கொள்ள 795 பணியாளர்கள் மற்றும் 50 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மிதமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டு, அவற்றில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள நபர்களுக்கு வெப்ப பரிசோதனை மற்றும் ஆக்ஸிஜன் அளவினை கண்டறியும் பரிசோதனையினை மேற்கொள்ள 795 பணியாளர்கள் மற்றும் 50 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பணியாளர்கள் 17.05.2021 இன்று முதல் நாள் ஒன்றுக்கு 100 வீடுகளுக்கு குறையாமல் காலை 8.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை ஒவ்வொரு வீடுவீடாக சென்று மேற்கண்ட பரிசோதனையினை மேற்கொண்டு வருகின்றனர். இப்பரிசோதனையின் போது எவருக்கேனும் ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதற்கும் கீழாகவோ அல்லது வெப்பநிலை 37C/98F அதிகமாகவோ இருந்தால் அவர்களுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் பாரசிட்டமல், வைட்டமின்-சி, ஜிங்க், கபசுர குடிநீர் தயாரிக்கும் பாக்கெட் மற்றும் முகக்கவசம் ஆகியவை அடங்கி மருத்துவ தொகுப்பு பெட்டகம் ஒன்று வழங்கப்படும்.
மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக வரும் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK