புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்- தமிழக அதிகாரிகள் பங்கேற்காதது ஏன்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அரசு சார்பில், மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், கல்வித் துறை அமைச்சர்களையும் அழைக்க வேண்டும், என்று தமிழக அரசு சார்பில், இமெயில் அனுப்பப்பட்டது.அதற்கு, மத்திய அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலும் அளிக்காததால், தமிழக கல்வித்துறை அமைச்சர் அதில் பங்கேற்கவில்லை.
கல்வித்துறை அதிகாரிகளும் அந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விட்டனர்.இதுதொடர்பாக தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி:புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், கல்வித் துறை அமைச்சர்களும் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட இமெயிலுக்கு, இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.அதனால் புதிய கல்வி கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து விட்டதாக கூற முடியாது.
அதில் கலந்து கொள்ளவில்லை.மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரம் என்பதால், ஒரு சில நாட்களில் மத்திய அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டால், எங்களது கருத்துக்களை முன் வைப்போம். இதில், ஈகோ பார்க்கவில்லை.2019 இல் மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, 2020 ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் தலைவர் ஸ்டாலின்,பள்ளிக்கல்வியில் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது அழுத்தம் ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.அந்த கருத்து தொடர்பாக புதிய கல்விக் கொள்கையில் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை.ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது பொதுவிதி.
புதிய கல்விக் கொள்கையின் படி மழலையர் படிப்பு துவங்குவதையும், குலக் கல்வி முறையையும் ஏற்க முடியாது. மத்திய அரசு இரு மொழிக் கொள்கைக்கு வேட்டு வைத்து, மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK