உயிரிழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக வைத்து பிராத்தனையில் ஈடுபட்ட மகள்கள் - உடலை மீட்டு போலீஸார் விசாரணை

உயிரிழந்த தாயின் உடலை மூன்று நாட்களாக வைத்து பிராத்தனையில் ஈடுபட்ட மகள்கள் - உடலை மீட்டு போலீஸார் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்கம்பட்டியில் உயிரிழந்த மூதாட்டி உடலை மூன்று நாட்களாக வைத்து அவருடைய மகள்கள் இருவர் பிராத்தனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாரை வீட்டிற்குள் வர அங்கிருந்த பெண்கள் இருவரும் மறுத்தனர். பின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பெண் காவல் உதவி ஆய்வாளர் உதவியுடன் போலீஸார் அந்த பெண்கள் இருந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு எந்தவித அசைவுமின்றி, கண்கள் திறந்து முழுவதும் நீலம் பூர்த்து காய்ந்த நிலையிலும், வாய் திறந்த நிலையிலும் 75 வயது மேரியின் உடல் படுக்கையில் இருந்தது.

அவரது அருகில் மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் மூதாட்டி கோமா நோயில் இருப்பதாகவும், அவருக்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் போலீஸாரை தடுத்து நிறுத்திய ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும், தங்களது தாயரை கொல்லப்பார்ப்பதாக கூறி காவல்துறையினரை மிரட்டியும் பார்த்தனர். இதனால் செய்வதறியாது போலீஸார் பின்வாங்கினர். அதனைத் தொடர்ந்து வருவாய் வட்டாட்சியர் நிகழ்விடத்துக்கு சென்று, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அங்கு மூதாட்டி உடலை பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டி உயிருடன் இல்லை என்பது தெரிய வந்தது.

இருப்பினும் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் அடம்பிடித்து மூதாட்டி உயிருடன் தான் உள்ளார் என வாதாட தொடங்கினர். அதனைத்தொடர்ந்து அவர்களிடம் சுமூகமாக பேசிய போலீஸார் அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கலாம் எனக்கூறி மூதாட்டியின் உடலை அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிருடன் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். மருத்துவரிடம் வாதாடி போராடிய ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி இருவரும் மூதாட்டியின் உடலை தர மறுத்து அழுதும், புலம்பியும் கண்ணில் கண்டவர்களையெல்லாம் மிரட்டியும் பார்த்தனர்.

பின்னர் அவர்களுக்கு போக்குக்காட்டி உறவினர்களுடன் காலையில் வந்து பார்த்து உடலை எடுத்துச்செல்லுங்கள் எனக்கூறி மூதாட்டி மேரியின் உடலை பிணவறைக்கு எடுத்து சென்றனர். மூதாட்டியின் உடலை மீட்க கொட்டும் மழையில் போலீஸார் சுமார் 4 மணி நேரம் போராட்டம் நடத்தி மீட்டெடுத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த மூதாட்டி இரு தினங்களுக்கு முன்பு திருச்சி உள்ள பல்வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மூதாட்டி உயிரிழந்து விட்டதாக அனைத்து மருத்துவமனையில் கூறியதாக தெரியவந்தது. இருந்தபோதிலும் மூதாட்டியின் உடலை வைத்து சிகிச்சை அளிப்பதாகவும், பிராத்தனையில் ஈடுபட்டால் மூதாட்டி நலமடைவார் என்றும் கூறி மகள்கள் ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி மூன்று நாட்களாக மூதாட்டி உடலுடன் தனி அறையில் இருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn