திருச்சியில் “தமிழகம் பிறந்தது” சிறப்பு கருத்தரங்கம்: பிரபலங்கள் பங்கேற்பு:
மனிதம் சமூகப்பணி மையம்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் இணைந்து நடத்திய
“தமிழகம் பிறந்தது” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் திருச்சி தேசியக் கல்லூரியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தாமரை இதழாசிரியர் தோழர் சி.மகேந்திரன்,மெகந்தி சர்க்கஸ் திரைப்பட இயக்குநர் சரவணன் ராஜேந்திரன்,* நடிகர் R J விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் சி.மகேந்திரன் தனது சிறப்புரையில்; “தமிழ்நாடு என்று நாம் பெயர் சூட்டுவதற்கு முன்பே ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த தொல்காப்பியத்தில் தமிழ் நிலம் தமிழ்நாடு குறித்த நிலம் மற்றும் எல்லை வரையரை குறிப்பிடப்பட்டுள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்க்கூறும் நல்லுலகம் என்ற பதிவு உள்ளது எனில் நம் , நிலம், மொழி, இனம், பண்பாடு, தொன்மை நாகரீகச் செழுமையை எண்ணி உலகம் வியக்கிறது.
தமிழகத்தில் 12 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் ஆட்சியில் இருந்தது. அதற்குப் பிறகு சுமார் 800 ஆண்டுகள் பல்வேறு மொழிக்காரர்கள் தமிழகத்தை ஆண்டனர். ஆனால் தமிழ் ஆட்சியில் இல்லை. இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழை அதன் செழுமையை மறையாமல் அடித்தள மக்களே பாதுகாத்தனர். உழைப்பு என்ற ஒன்றைக் கற்றுக் கொண்டப் பிறகு மனிதன் மிருகத்திடம் இருந்து வேறுபடுகிறான். உழைப்பு, மொழி இரண்டும் மனித சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்தியது. நவம்பர் முதல் தேதியை மாநில நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஓராண்டுக்கு முன்பே கலை இலக்கியப் பெருமன்றமும் தாமரையும் இணைந்து தமிழகம் பிறந்தது என்ற நூலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்தே தமிழக அரசு நவம்பர் முதல் தேதியை மாநில நாளாகக் கொண்டாட வலியுறுத்தியுள்ளது .. இதுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசும் மாநில நாளைக் கொண்டாட எந்தவிதமான முன் முயற்சியும் எடுக்கவில்லை. இனியாவது மக்களாகிய நாம் மக்களிடம் கொண்டு போக வேண்டும் என்றார்”.
முன்னதாக கலை இலக்கியப் பெருமன்றமாநகர் மாவட்டச் செயலாளர் பேரா.கி.சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் இந்திரஜித் தலைமையுரையாற்றினார். கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் எம். செல்வராஜ், திரைப்பட இயக்குநர் சரவணன் ராஜேந்திரன்., நடிகர் RJ விக்னேஷ் வாழ்த்துரை வழங்கினர். மனிதம் சமூகப்பணி இயக்குநர் தினேஷ் நன்றி கூறினார். கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.