திருச்சியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 15 லட்சம் நகைகள் கொள்ளை
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் கடல்கன்னி. இவர் தஞ்சாவூர் மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சொந்தமான மற்றொரு வீடும் உள்ளது.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூரில் உள்ள வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதற்கிடையில் நேற்று திருச்சியில் உள்ள வீட்டிற்கு வந்த கடல் கன்னி வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ கதவு திறந்து அதில் இருந்த பொருட்கள் கீழே ஆங்காங்கே சிதறிக் கிடப்பது தெரியவந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனடியாக நம்பர் 1 டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது 7 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், தங்க செயின், வளையல் தோடு உள்ளிட்ட 19 பவுன் நகைகள் திருடு போனதாக ஆசிரியை கடல்கன்னி தெரிவித்துள்ளார். வீட்டில் தொடர்ந்து ஆளில்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தங்கம், வைரம் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0