திருச்சி மாநகரில் 2022-ம் ஆண்டு குற்ற செயல்களில் ஈடுபட்ட 16,526 பேர் கைது
திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கெட்டநடத்தைக்காரர்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையா;கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 16,526 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்பு காவல் சட்டம்
திருச்சி மாநகரத்தில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், போதை பொருட்களை விற்பனை செய்தவர்களை கண்டறிந்து 2022-ஆம் ஆண்டில் 185 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து கடந்த 1997-ஆம் ஆண்டு திருச்சி மாநகர காவல் ஆணையரகமாக பிரிக்கப்பட்டபிறகு ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மீது எடுக்கப்பட்ட குண்டர்தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 23 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே அதிக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டைவிட (40 நபர்கள்) 4 மடங்கும், 2021-ஆம் ஆண்டைவிட (85 நபர்கள்) 2 மடங்கிற்கும் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று, பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு அவர்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 14 நபர்கள் மீதும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 நபர்கள் மீதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்த 4 நபர்கள் மீதும், ஆகமொத்தம் 24 நபர்கள் மீது குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா, புகையிலை, குட்கா 2022-ஆம் ஆண்டில் இதுவரை தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த 258 நபர்கள் மீதும், புகையிலை மற்றும் குட்கா போதை பொருட்களை விற்பனை செய்த 770 நபர்கள் மீதும், ஆகமொத்தம் 1028 நபர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லாட்டரி, மதுபானங்கள் விற்பனை : 2022-ஆம் ஆண்டில் இதுவரை தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 137 நபர்கள் மீதும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1630 நபர்கள் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 156 நபர்கள் மீதும், ஆகமொத்தம் 1923 நபர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.:
பொது இடங்களில் இடையூறு செய்தவர்கள் : 2022-ஆம் ஆண்டில் இதுவரை பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12,085 நபர்கள் மீதும் உரிய சட்ட பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 (3212 நபர்கள்) மற்றும் 2021 (6110 நபர்கள்) ஆண்டுகளைவிட அதிகமாகும்.
ரவுடிகள் : திருச்சி மாநகரத்தில் பொது அமைதியை பேணிக்காப்பதற்காகவும், சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பொருட்டு 516 சரித்திர பதிவு ரவுடிகள் மற்றும் 149 கெட்ட நடத்தைக்காரர்கள், சரித்திர பதிவு இல்லாத ரவுடிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான நன்னடத்தை பிணையம் பெறவேண்டி 2022-ஆம் ஆண்டில் 1490 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1208 நபர்கள் மீது பிணைய பத்திரம் முடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்னடத்தை பிணையத்தை மீறியவர்கள் : திருச்சி மாநகரத்தில் பொது அமைதியை பேணிக்காப்பதற்காக குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான நன்னடத்தை பிணையம் பெற்றிருந்தும், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு பிணையத்தை மீறிய 34 ரவுடிகள் உட்பட 53 நபர்கள் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல்துறை நடுவரால் சிறைதண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 (29 நபர்கள்) மற்றும் 2021 (52 நபர்கள்) ஆண்டுகளை விட அதிகமாகும்.
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பொது இடங்களில், பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து 2022-ஆம் ஆண்டில் இதுவரை 16,526 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020 (8,808 நபர்கள்) மற்றும் 2021 (10,970 நபர்கள்) ஆண்டுகளைவிட அதிகமாகும்.
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை : திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளை விட, 2022-ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. எந்தவித பழிவாங்கும் கொலைகளோ, சாதி-மத ரீதியான கொலைகளோ நடைபெறாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பகுதி ஆதிக்கம் : திருச்சி மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அவ்விடங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2190 முறை பகுதி ஆதிக்கம் செய்து பொதுமக்களிடம் நேரடியாக கலந்து பேசி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு முகாம் மற்றும் கூட்டங்கள் : கல்லூரி, பள்ளிகளில் மாணவர்களுக்கான கஞ்சா மற்றும் புகையிலை, குட்கா போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து கல்லூரி பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் இணைந்து திருச்சி மாநகர காவல் துறை சார்பில் 340 'போதை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணா;வு கூட்டம்" நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மற்றும் போக்சோ குற்றங்களை குறித்தும், 'காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி"யின் பயன்பாடு குறித்தும் கல்லூரி பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான 968 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் சாலை போக்குவரத்து மற்றும் விதிகள் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும், மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் 'சாலை பாதுகாப்பு மாதங்கள்" மற்றும் 176 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் முகாம் நடத்தப்பட்டு சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரத்தில் போதையில்லா நகரை உருவாக்கும் பொருட்டு, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினருடன் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு 2022-ஆம் ஆண்டில் 2629 மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை தொடரும் : திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றவாளிகள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய, சட்டரீதியான, கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn