அதிமுக முன்னாள் அமைச்சர் விபத்தில் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநருக்கு ஓராண்டு நான்கு மாதம் சிறை தண்டனை

அதிமுக முன்னாள் அமைச்சர்  விபத்தில் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநருக்கு ஓராண்டு நான்கு மாதம் சிறை தண்டனை

திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் நல்லமுகமது மகன் மரியம்பிச்சை. 2011ல் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த இவர், அமைச்சராக பொறுப்பேற்ற 8வது நாள் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க கடந்த 2011 மே 23ம்தேதி இனோவா காரில் முன்சீட்டில் அமர்ந்து திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

அந்த காரை சென்னை, முகப்பேறு மேற்கு வெள்ளாளத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஆனந்தன் (27), என்பவர் ஓட்டிச்சென்றார். கார், காலை 9 மணியளவில் பெரம்பலுார் மாவட்டம், திருவிளக்குறிச்சி பிரிவு ரோடு அருகே முன்னே சென்றுக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது அந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த அமைச்சர் மரியம்பிச்சை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதில் காரில் வந்த வெங்கடேஷ், மாதேஸ்வரன், கார்த்திகேயன் மற்றும் கார் டிரைவர் ஆனந்தன் ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் பாடாலுார் போலீசார் விசாரணை செய்து அமைச்சரின் கார் டிரைவர் ஆனந்தன் மற்றும் கன்டெய்னர் லாரி டிரைவர் ஆந்திராவை சேர்ந்த நியமத்துல்லா ஆகியோர் மீது வழக்கு வழக்கு பதிந்தனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 24ம்தேதி அரசு உத்தரவின்படி இந்த வழக்கு திருச்சி சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு பெரம்பலுார் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ஆனந்தனுக்கு ஓராண்டு மற்றும் 4 மாத சிறை தண்டனை மற்றும் மூவாரூயிரத்து 500 ரூபாய் அபராதமும், கன்டெய்னர் லாரி டிரைவர் நியமித்துல்லாவிற்கு ஓராண்டு மற்றும் 4 மாத சிறை தண்டனையும், நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision