திருச்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் மைதானம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் மைதானம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர் பகுதியை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து குடிநீர் உந்தப்பட்டு உறையூர், தில்லைநகர் பகுதிகளில் உள்ள 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்பட்டு அக்கிருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நீரில்  இரும்பு தாதுவின் அளவு அதிகம் (0.60 mg/ltr) இருந்ததால் இப்பகுதியில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்களிடமிருந்து தொடர் புகார்கள் பெறப்பட்டதாலும், அதனை சரிசெய்யும் பொருட்டு மாநில நிதிக்குழுவில் மானியம் பெற்று ரூ.5 கோடி செலவில் காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறை அருகே  புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு... 10 ஆண்டு காலம் செய்ய முடியாததை தற்போது மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றி உள்ளோம். நான் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டு இருந்த பொழுது எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் முன்னேற்றும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் உடனடி அனுமதி வழங்கி வருகிறார். அந்த வகையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கும் அனுமதி வழங்கி அது தற்போது திறந்து வைக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய கழிவறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற நகரங்களைக் காட்டிலும் திருச்சி மாநகரம் சிறப்பான நகரமாக அமைய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் சென்னை கவனிப்பது போல, திருச்சியும் கவனித்து வருகிறார். திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள 520 ஏக்கர் நிலம் வளர்ச்சித் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை வருவாய் ஈட்டும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மார்க்கெட், வணிக வளாகம் அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் அருகிலேயே 200 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் மைதானம் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn