சினிமாவில் பாணியில் ஆன்லைன் மார்கெட்டிங் என்ற பெயரில் 36 லட்சம் ஏமாற்றிய ஏஜெண்டுகள்:

சினிமாவில் பாணியில் ஆன்லைன் மார்கெட்டிங் என்ற பெயரில் 36 லட்சம் ஏமாற்றிய ஏஜெண்டுகள்:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்த ராசு என்பவரின் மகன் முருகேசன். இவரிடம் ஆலவயல் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தான் BIT COIN மல்டி லெவல் ஆன்லைன் மார்கெட்டிங் என்ற நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிவதாக கூறியுள்ளார். இதன் உரிமையாளர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜதுரை மற்றும் அவரது மனைவி சுவேதா என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் சுமார் 10 டாலர் மதிப்பில் ரூ.700 முதலீடு செய்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3 முதல் 50 வரை இலாபம் சம்பாரிக்கலாம் என்றும்,டாலருக்கு தகுந்தாற்போல் கமிஷன் அதிகரிக்கும் என்றும், அறிமுக கமிஷன் மற்றும் PAIR கமிஷன் மூலமாக நாள் ஒன்றுக்கு 4,900 வரை சம்பாரிக்கலாம் என்வும், உறுப்பினர்கள் சேர சேர கமிஷன் அதிகரிக்கும் என்றும் ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு செய்ய வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று (10.12.19 ) திருச்சி மாநகர் குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை முருகேசன் அளித்துள்ளார். அதில் தான் கார்த்திக் என்பவரிடம் திருச்சியில் வைத்து பல தவணைகளாக 36 லட்சத்து 40 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், பணத்தை பெற்றபின்பு அந்நிறுவனம் தனக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் மட்டுமே திருப்பி தந்ததாகவும், மீதமுள்ள 31லட்சத்து 15 ஆயிரம் ரொக்கத்தை திருப்பி கொடுக்காமல் அவர்கள் ஏமாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில், தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே நின்றுகொண்டிருந்த கார்த்திக், ரமேஷ், குட்டிமணி, கணேசன் , தங்கராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்று அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறும் போலியான மொத்த நிறுவனங்களிடம் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாறி வருவது தொடர் கதையாகி வருகிறது. பொதுமக்கள் ஒரு நிறுவனத்தை அணுகும்போது நன்கு அறிந்த பின்பு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும்.