திருச்சியில் 43 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் - வாலிபர் வங்கிக்கணக்கை முடக்க நடவடிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் சென்று பார்த்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மூட்டை மூட்டையாக ஹான்ஸ், கணேஸ், விமல், கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 43 மூட்டைகளில் இருந்த குட்காவை பறிமுதல் செய்த தனிப்படையினர் வளநாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மணப்பாறை போலீஸ் டிஎஸ்பி ராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் பாலமுருகன் (வயது 29) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதோடு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 மூட்டையில் உள்ள சுமார் 10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சரக்கு மினிவேனில் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். திருச்சியில் இருந்து வாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் இவ்வளவு குட்கா பொருட்கள் எங்கிருந்து வந்தது, எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறது யாரெல்லாம் இந்த விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பாலமுருகனின் வாங்கிக்கணக்குகளை முடக்கவும், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வளநாடு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தவிட்டுள்ளார். மணப்பாறை அருகே 43 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO