மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் - பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் 222 (திருச்சி 28, புதுக்கோட்டை 39, கரூர் 15, பெரம்பலூர் 12, அரியலூர் 25, தஞ்சாவூர் 48, திருவாரூர் 27, நாகப்பட்டினம் 17, மயிலாடுதுறை 11 ) ஆகிய இடங்கள் மத்திய மண்டலத்தில் கண்டறியப்பட்டுள்ள.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் முயற்சியாக அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர்கள், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் பெண்கள் உதவி குழு காவலர்கள் ஆகியோர் கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடன் இணைந்து நேரடியாக சம்பந்தப்பட்ட குற்ற சம்பவ இடங்களுக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு கூட்டம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடத்தி வருகின்றனர்.
இதுவரை திருச்சி மத்திய மண்டலத்தில் 451 விழிப்புணர்வு கூட்டங்கள் கடந்த 2 மாதங்களில் நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக திருச்சியில் 71, புதுக்கோட்டையில் 73, கரூர் 38, பெரம்பலூர் 10 , தஞ்சாவூர் 104, அரியலூர் 30, திருவாரூர் 81, நாகப்பட்டினம் 27 மற்றும் மயிலாடுதுறை 12 ஆகிய இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளனன.
மேற்படி விழிப்புணர்வு கூட்டங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கான காரணங்களும் அவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளும் பொதுமக்களிடம் கேட்கப்பட்டு குற்றங்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல்துறையினர் குற்றங்கள் மேலும் நிகழாத வகையில் விழிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளான தந்தையால் துன்புறுத்தப்படும் குழந்தைகள், கணவன் - மனைவி இடையேயான குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்தற்க்கான தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளும் இத்தகைய நேரடி கள ஆய்வின் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் சிறார்கள் இந்த குழுவினரால் கண்டறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் மத்திய மண்டலத்தில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட 18 குழந்தைகள் கண்டறியப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலத்துறை மூலம் அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை சிறப்பாக நடத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் ஷர்மிளா - திருத்துறைப்பூண்டி, சந்திரா - தஞ்சாவூர் மற்றும் காந்திமதி - குளித்தலை ஆகியோருக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn