திருச்சியில் 495 பேருக்கு பிணை - 35 நபர்களுக்கு சிறை
திருச்சி மாநகரில் குற்றச் செயல்களை தடுக்க பொதுமக்களின் அமைதியை பேணிக் காப்பதற்கு திருச்சி மாநகர காவல் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குற்றங்களை தடுப்பதற்கு அவ்வப்போது சிறப்பு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திருட்டு கொள்ளை வழக்குகளில் விரைந்து கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களின் அமைதியை பேணி காப்பதற்கு திருச்சி மாநகரில் வசிக்கும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு உரிய சரித்திர பதிவேடு அந்தந்த காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சரித்திர பதிவேட்டில் உள்ளவர்கள் ரோந்து காவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சரித்திர பதிவேடு உள்ளவர்களில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அவர்களின் முந்தைய குற்றங்களின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி திருச்சி மாநகர நிர்வாக நடுவர் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஒரு வருட காலத்திற்கு குறையாமல் பிணையும் பெறப்படுகிறது. அப்பிணையத்தை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணைய காலத்திற்கு மிகாமல் குறிப்பிட்ட காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.
இவ்வாறு இந்த 2021 ஆண்டில் 456 நபர்களிடம் பொது அமைதியை பேணுவதற்கான பிணையமும், 36 நபர்களிடம் நன்னடத்தை காணப் பிணையமும், 3 வழக்கமான குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணையமும் ஆக மொத்தம் 495 நபர்களிடம் பிணையம் பெறப்பட்டுள்ளது. இவற்றில் பிணையை மீறி செயல்பட்ட 35 நபர்களுக்கு திருச்சி மாநகர நிர்வாக நடுவர் மற்றும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அவர்களால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் யாரேனும் பொது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ அல்லது குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை மூலம் எச்சரிக்கப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn