திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்சிஜன் வாயு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்சிஜன் வாயு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

நாகர்கோவிலில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவு தளத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜன் வாயு லாரி மூலம் பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வ கணபதி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். அப்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் உள்ள சோதனை சாவடி முன்பு இருந்த தடுப்புகள் மீது லாரி மோதி சாலையில் ஒரு பக்கமாக கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த டீசல் சாலை முழுவதும் கொட்டியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் எந்த சேதமும் ஏற்படாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கம்பங்கள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக காயம் அடைந்த ஓட்டுனரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

முன்னதாக நடத்திய விசாரணையில் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை எடுப்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி கிரேன் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தப்பட உள்ளது.

இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சியில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் இப்பகுதியில் கடப்பதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn