2 நாட்களில் 84 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு - மத்திய மண்டல காவல் துறை தலைவர் நடவடிக்கை
மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் பேரில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகள் மற்றும் பொது வெளிகளில் சுற்றித்திரியும் நபர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இதில் 01.07.2021 மற்றும் 02.07.2021 ஆகிய இரு தினங்களிலும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைமையில், சமூக நலத் துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது மனநலம் பாதிக்கப்பட்டு பொது வெளியில் சுற்றித் திரிந்த 64 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் உள்பட 84 நபர்கள் கடந்த இரு தினங்களில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உணவு மற்றும் நல்ல ஆடைகள் அளிக்கப்பட்டன. பின்னர் மீட்கப்பட்ட அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு உறைவிடங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டத்தில் 18 நபர்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 17 நபர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 9 நபர்களும் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா 8 நபர்களும் மீட்கப்பட்டுள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவர்கள் குடும்பத்தினரை அடையாளம் கண்டு மீண்டும் ஒப்படைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட 4 நபர்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் நேரில் சந்தித்து அவர்களது தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP