வக்ஃப் சட்டத்தில் திருத்தம் - தமிழக வக்ஃப்சொத்துகள் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில தலைவர் & நிறுவனர் கண்டனம்

வக்ஃப் சட்டத்தில் திருத்தம் - தமிழக வக்ஃப்சொத்துகள் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில தலைவர் & நிறுவனர் கண்டனம்

வக்ஃப் சட்டத்தில் திருத்தம் இதுதொடர்பாக தமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத்துல் ஜமாத் தமிழக வக்ஃப்சொத்துகள் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில தலைவர்& நிறுவனர் A.R.அல்தாப் உசேன் சாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வக்ஃப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை தவறானது, கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பின் 25-28 பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மறுத்து, முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக ஒதுக்கி அடிமைப்படுத்த திட்டமிட்ட நடவடிக்கை இதுவாகும்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி கோல்வால்கரின், முஸ்லிம்களை சீர்குலைக்கும் முன்னோடியான வகுப்புவாத செயல்திட்டங்கள், பத்தாண்டுகளுக்கு முன்பு மத்தியில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறி முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை இடித்து, மறுபுறம் மசூதிகளுக்கு அடியில் சிலைகள் இருப்பதாகக் கூறி, அவை கைப்பற்றப்பட்டு, கோவில்களாக மாற்றப்படுகின்றன. 

முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் சட்டங்கள் சீரான இடைவெளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வக்ஃப் சொத்துக்கள் பொதுச் சொத்துகள் அல்ல. அவை மசூதிகள், மதரஸாக்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்ற பல்வேறு மத நோக்கங்களுக்காக அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துக்கள். வக்ஃப் வாரியம் மற்றும் வக்ஃப் சொத்துக்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வக்ஃப் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், இந்த சட்டத்தை திருத்துவதற்கான தற்போதைய நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் செல்வாக்கு உள்ள பல செல்வந்தர்களால் ஏராளமான வக்ஃப் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, வக்ஃப் சொத்துகளைப் பயன்படுத்துவதற்கு திருத்தம் என்கிற பெயரில் தேவையற்ற தடைகளை விதிக்காமல், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய வகுப்புவாத நிகழ்ச்சி நிரலைதமிழக தர்காக்கள் பேரவை தமிழக இஸ்லாமிய சுன்னத்துல் ஜமாத் தமிழக வக்ஃப்சொத்துகள் பாதுகாப்பு ஆலோசனை குழு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், அரசியலமைப்பிற்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையில் இருந்து அரசு பின்வாங்கி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரசியலமைப்பு உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision