திருச்சியின் மற்றொரு மலைக்கோட்டை - எறும்புகள் வழிபட்ட கோவில்!!
எப்போதும் பரபரப்பாக இருக்கும் திருச்சி - தஞ்சாவூர் சாலையில் செல்லும்போது திருவெறும்பூரில் நாம் பார்க்கும் திருக்கோவில் தான் எறும்பீஸ்வரர் கோவில். இக்கோவில் கண்டராதித்த சோழன் காலத்தில் செங்கல் தளியாக இருந்து பின்பு கற்றளியாக மாற்றப்பட்டது ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் இக்கோவிலில் பல இடங்களில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பும் கூட கருவறை அருகே இருந்து சோழர் கால கல்வெட்டு ஓன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் பாண்டியர்கள், சோழர்கள் என பல மன்னர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த இந்திரலோக சண்டையில் இந்திரலோகத்தை இழந்த தேவர்கள் அசுரருக்கு பயந்து எறும்பாக மாறி இங்கு சுயம்புவாக வீற்றிருந்த சிவனை மலர்களை கொண்டு பூஜித்து வழிபட்டுள்ளனர்.
இந்திரலோகத்தில் இருந்த அனைத்து தேவர்களும் எறும்பாக மாறி இங்கிருந்த சிவனை வழிபட முடியாமல் திணற, தன் தலையை சாய்த்து வழிபட எளிதாக்கினார் என்பது வரலாறு. இதனாலேயே இங்கிருக்கும் சிவன் எறும்பீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும், அவரின் பெயரிலேயே இந்த ஊர் திருவெறும்பியூர் என்றழைக்கப்பட்டு தற்போது திருவெறும்பூர் என்று அழைக்கப்படுகிறது. தற்போதும் எறும்பீஸ்வரருக்கு பூஜை நடக்கும்போது எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளும் எனவும், சிவன் தான் எறும்பு வடிவில் வருகிறார் என்றும் நம்பிக்கை உள்ளது.
இத்திருத்தலத்தில் எறும்பீஸ்வரராக சிவனும், அம்பிகையாக நறுங்குழல் நாயகி அம்பாளும் எழுந்தருளியுள்ளனர். இத்தல அம்பாள் அழகில் நிகரற்றவராக கருதப்படுவதால் தினமும் விதவிதமாக அலங்காரம் செய்யப்படுகிறார். சிறிய மலை குன்றின் மீது அதிகபட்சமாக 150 படிக்கட்டுகள் ஏறினால் சந்நதிகளை அடைய முடியும்.
எறும்பினால் வணங்கப்பட்ட கோவில் என்பதால் இங்கு வந்து வழிபடுபவர்கள் சோம்பேறியாக இருந்தால் சுறுசுறுப்பாக மாறுவார்கள் என்பது ஐதீகம். மேலும் வேலை வாய்ப்பு வேண்டியும், வெளிநாடு செல்வதற்கும் இந்த கோவிலில் வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இங்கு வந்து பாலபிஷேகம் செய்கின்றனர்.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் திருவெறும்பூர் உள்ளது. சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தொடர்ச்சியாக பேருந்து வசதி உள்ளது. தினமும் காலை 06:30 முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision