தேசிய மருத்துவர் தினம் - உயிர் காக்கும் மருத்துவர்களை கொண்டாடுவோம்

தேசிய மருத்துவர் தினம் - உயிர் காக்கும் மருத்துவர்களை கொண்டாடுவோம்

மருத்துவர்களுக்கு பரந்த அன்பும், சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம். துடித்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காணும்போதெல்லாம் மருத்துவரின் மனதில், அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கை மனதில் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் அளவிடவே முடியாது.

‘இந்த உலகில் தெய்வமே இல்லை’ என்று வாதிடுபவர்கள்கூட, மருத்துவரின் அளப்பரிய சேவையைக் கண்டு, அவர் வடிவில் தெய்வத்தைக் கண்டதாகக் கூறுவது உண்டு. இன்று தேசிய மருத்துவர்கள் தினம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி, டாக்டர் பி.சி.ராய் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

பீஹார் மாநிலம், பாட்னா நகருக்கு அருகேயுள்ள பாங்கிபோர் எனுமிடத்தில் 1882-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி பிறந்தார் பி.சி.ராய். முழுப்பெயர் பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy). இளம் வயதிலிருந்தே கணிதத்தின் மீது ஆர்வம்கொண்டிருந்தார் ராய். பாட்னா கல்லுாரியில் சேர்ந்து, கணிதத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, மேற்படிப்பை பிரிட்டனில் பயின்றார். மருத்துவத்தில் நிபுணராக மாறிய பி.சி.ராய், இந்தியாவில் பல மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியராகப் பணியாற்றி, பல சிறந்த மருத்துவர்களை உருவாக்கினார்.

ஏழை, எளிய மக்களுக்காகச் சிறப்பாக மருத்துவம் பார்த்து, மருத்துவ உலகுக்கு பெருமை சேர்த்த பி.சி.ராய், நோயாளிகளின் கண்ணீரைத் துடைப்பதற்காக தினமும் தன் வீட்டிலிருந்து மருத்துவம் பார்த்தவர். அந்த வீட்டைப் பின்னர் மருத்துவமனையாக மாற்றி, ஏழை மக்கள் பயனடைய வழி செய்தார். 1961-ம் ஆண்டில் அவரது சேவையைப் பாராட்டும்விதமாக ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி, சிறப்பித்தது இந்திய அரசு. மக்களுக்காகவே வாழ்ந்த மருத்துவ உலகின் அபூர்வ நட்சத்திரமான பி.சி.ராய், எந்த நாளில் பிறந்தாரோ அதேநாளில் இவ்வுலகில் இருந்து மறைந்தார். 

பி.சி.ராய் மருத்துவ சேவையை அனைவரும் அறியும் வண்ணம், அவரது பெயரில் 1976-ம் ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு ‘டாக்டர் ராய் விருது’ வழங்கி, கெளரவிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினத்தை அமெரிக்கா மார்ச் 30-ம் தேதியும், கியூபா டிசம்பர் 3-ம் தேதியும் கொண்டாடி, மகிழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை கொண்டு மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது .அந்தவகையில் இந்த ஆண்டு தேசிய மருத்துவர் தினத்தின் கருப்பொருள் 'குணப்படுத்தும் கரங்கள், அக்கறையுள்ள இதயங்கள்' என்பதாகும். மருத்துவத்துறையில் குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது.

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் காவிரி மருத்துவமனை மருத்துவர் அனீஸ் கூறுகையில்...... மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கொரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.

நோயாளிகளின் நல்வாழ்வுக்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள், நோய்நிலையில் இருந்து விரைவாக மீட்க உதவுகிறார்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறார்கள். அவர்கள் மருத்துவ அறிவியலை நன்கு புரிந்துகொண்டு நோயாளிகளின் மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கும் தங்கள் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்

மருத்துவர்களை மதிக்க வேண்டிய கடமை நோயாளிக்கு உண்டு. அதேபோல் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டிய கடமை மருத்துவருக்கும் உண்டு. இரு உறவுகளும் இணக்கத்துடன் இருக்கும் வரையில்தான் சமூகத்தின் இயக்கம் சரியாக இருக்கும். ஆனால், அவ்வப்போது இந்த நோயாளி, மருத்துவர் உறவில் பெரிய சர்ச்சைகளும், சமாதானப்படுத்தவே முடியாத அளவுக்கு சண்டைகளும் வந்துவிடுவதுண்டு.

இன்றைய காலகட்டத்தில் இன்னொரு சவாலான விஷயம் சமூக வலைதளங்களில் பரவும் மருத்துவ குறிப்புகளை நம்பி பலரும் ஏமாந்து விடுகின்றனர் ஒவ்வொரு செய்தியையும் தீர விசாரித்துக் கொள்வதும் சிறந்தது. இங்கே எல்லாவற்றிற்கும் மிகச் எளிய வழி தனி மனித கட்டுப்பாடு தான் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision