46 மொழிகளை சரளமாக பேசி, 400 மொழிகளில் வாசிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யும் திறன்கொண்ட மாணவருக்கு விருது
தாய்மொழியை கற்பதிலேயே பல சிரமங்கள் இருக்கும் நிலையில் இணைப்பு மொழியான ஆங்கிலத்தை கற்பது என்பது சொல்லவே வேண்டாம், அது கல்லூரி வரையிலும் மாணவர்களை ஏன் வேலைக்குச் சென்ற பிறகும் ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றல் இல்லாமல் இன்றளவும் பல அவதிக்குள்ளாகி வருவதை நாம் காணமுடிகிறது.
தற்போது சிபிஎஸ்சி, ஆங்கிலோ இந்தியன் என பள்ளிகல்வி நிறுவனங்களில் தாய்மொழி தவிர்த்து அயல் மொழியையும் கற்றுக் கொடுப்பதிலும், கற்றுக் கொள்வதிலும் தற்போது பெற்றோர்களும், மாணவர்களும் ஆர்வம்காட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கற்று பேச,எழுத, படிக்க புலமைபெற்றவர்கள் ஏன் பன்மொழி திறமை மிக்கவர்களும் சொற்ப நபர்களே உள்ளனர்.
ஆனால் உலகில் உள்ள 46 மொழிகளை சரளமாக பேசுவதோடு, 400 மொழிகளில் வாசிக்க, எழுத மற்றும் தட்டச்சு செய்யும் திறனையும், 20 மொழிகளை கற்பிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 19 வயது மாணவர் மஹ்மூத் அக்ரம்.
இவரது திறனை பார்த்து ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் இலவச கல்விகற்று தற்போது, இந்தியாவில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் பல்வேறு நாடுகளுக்குச்சென்று நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் பயிற்சிகளும், பன்மொழிவகுப்பு மற்றும் மொழிப்பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார்.
தற்போது லண்டன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மொழியியலை முதன்மை பாடமாகஎடுத்து, இரண்டாம்ஆண்டு பயின்றுவரும் மகமூத் அக்ரமின் திறனை வியந்து, பன்மொழி நட்சத்திரமான அக்ரமுக்கு திருச்சியைச் சேர்ந்த கிளாசிக் திறன் வளர்ச்சி நிறுவனம் கிளாசிக் விருது 2024 மற்றும் லிங்குயிஸ்டிக் ஐகான் விருது எனப்படும் மொழியியல் சின்னம் என்ற விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது.
இந்த விருதினை காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பஞ்சநாதம், கிளாசிக் திறன்வளர்ச்சி நிறுவன தலைவர் ஆதப்பன் சுந்தரம் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். நான்கு வயதில் ஆங்கில மொழியை ஆறு நாட்களில் கற்றுக்கொண்டதாகவும், அதனைப்பார்த்து வியந்த தனது தந்தைமூலமாக அவருக்குத் தெரிந்த 16 மொழிகளை கற்றுக்கொண்டதுடன், ஆறு வயதில் தட்டச்சு பயிற்சியும், இன்டர்நெட் வாயிலாக எட்டு வயதில் 50 மொழிகளை பயின்ற அக்ரமுக்கு பஞ்சாபில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் இளம் திறமையாளர் விருதும் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்ததாக தெரிவித்தார்.
10 வயதில் 200 மொழிகளை எழுத, பேச மற்றும் தட்டச்சுசெய்ய கற்றுக்கொண்டதுடன், 12 வயதில் நானூறு மொழிகளையும் கற்றுத் திறந்த அக்ரம், ஆஸ்திரியாவில் பல்வேறு நாட்டு மாணவர்களுடன் பயிலும்போது அவர்களுடன் உரையாடியதால் தற்போது 46 மொழிகளை கற்று தேர்ந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.
எந்த மொழியானாலும் அந்த மொழியை கற்றுக் கொள்ள அந்த இடத்திற்கு செல்வது அவசியம், அவ்வாறு வாய்ப்பு கிடைக்காவிட்டால் அந்த மொழிக்கு உரிய சுற்றுச்சூழலை உருவாக்கி, அந்த மொழிபாடல் கேட்கவும், பேசவும், எழுதவும் பயிற்சி மேற்கொண்டால் பிற மொழிகளை கற்பது என்பது எளிதாகிவிடும் என்றும் மாணவர்களுக்கு தனது எளிய கற்றல் ஆலோசனையை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision