பேருந்து கடத்தல் வழக்கு பாஜக சூர்யா சிறையில் அடைப்பு
கடந்த 11ம் தேதி சென்னையிலிந்து திருச்சி நோக்கி தனது காரில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜக ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளருமான சூர்யா வந்து கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே வாகன நெரிசலில் நின்று கொண்டிருந்தபோது பின்னே வந்த தனியார் ஆம்னி பேருந்து சூர்யா கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதுக்குறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக தன்னை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மிரட்டி வருவதாகவும், தன்னை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாகவும், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புதிய புகாரின்பேரில் தன்னை காவல்துறையினர் கைது செய்ய முனைந்து இருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 22.06.22-ந்தேதி ஸ்ரீ கிருஷ்ண டிராவல்ஸ் மேலாளர் முருகானந்தம் என்பவர் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் காருக்கு ஏற்பட்ட சேதாரத்தை சரி செய்து கொடுத்து விடுவதாக சமாதானமாக பேசியும், காரை திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் சரிசெய்வதற்காக கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 19.06.22-ந்தேதி சூர்யா அவரது ஆட்களுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து
அங்கு சென்னைக்கு ஆட்களை ஏற்றி கொண்டிருந்த ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகளை மிரட்டி கட்டாயப்படுத்தி இறக்கிவிட்டு, ஒட்டுனரை மிரட்டி தான் உபயோகித்த காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்துவிட்டு மேற்படி பேருந்தை எடுத்து கொள்ளுமாறு தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தும், பேருந்தை ஒட்டுனருடன் கடத்தி சென்றுவிட்டதாகவும், பேருந்தை மீட்டும், அதை கடத்திய சூர்யா மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்த சூர்யாவை கண்டன்மெண்ட் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கண்டோன்மென்ட் காவல் நிலைய முன்பு கூடினர்.
சூர்யா கைது செய்யப்பட்டதைத் கண்டித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாஜகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைய மறுத்ததால் 50க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர்
கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் பிஜேபி கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது.
அப்போது சிலர் திடீரென காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர். பின்னர் சூர்யா மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர் தொடர்ந்து திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.