தீங்கு தரக்கூடிய கோனோகார்பஸ் மரத்திற்கு தடை - திருச்சி எம்பி அறிக்கை
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்..... தமிழ்நாடு அரசு, கோனோகார்பஸ் (Conocarpus) மரத்தை சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் தீங்குகளைக் காரணம்காட்டி தடை செய்துள்ளது. அதனை மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் வரவேற்கிறேன்.
தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டிருக்கும், இந்த கோனோகார்பஸ் மரத்தின் மகரந்தம் காற்றில் பரவும் போது, தும்மல், இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உருவாகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். தமிழ்நாடு அரசு இதனை கருத்தில் கொண்டு, இந்த மரங்களை நடவு செய்வதை தடை செய்துள்ளது.
மேலும், பொது இடங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ வளாகங்கள், அரசு நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வன நிலங்களில் உள்ள கொனோகார்பஸ் மரங்களை அகற்றிட உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறை அத்துடன், இந்த நச்சு மரத்தை அகற்றிய பிறகு அந்த இடத்தில் நட்டு வளர்க்க நாட்டுமரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவும் அரசு முன்வந்துள்ளது.
சீமைக்கருவேல மரங்களால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பட்டியலிட்டு, மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்து, தானே மரம்வெட்டும் ஆயுதங்களோடு களத்தில் இறங்கி அந்த நச்சு மரத்தை அடியோடு அகற்றும் பெரும்பணியில் இயற்கை ஆர்வலராக, ஒரு விவசாயியாக, தன்னலம் கருதாத மனிதராக, சீமைகருவேல மரத்தை தமிழ்நாட்டிலிருந்து முற்றாக அகற்ற நீதிமன்றத்தில் வழக்காடி, அரசுக்கு உத்தரவிட செய்த நம் இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்களின் அரும்பணியை நான் இங்கு நினைவுக்கூற கடமைப்பட்டுள்ளேன்.
அந்த சீமைக்கருவேல மரம் எப்படி எவ்வகையிலான நிலத்திலும் வேர்பிடித்து வளருமோ அதுபோலவே இந்த கோனோகார்பஸ் மரமும் வளரும் தன்மைக்கொண்டது. இந்த மரத்தை பல மாநிலங்கள் ஏற்கனவே தடை செய்துள்ளனர். எனவே இந்த நச்சு மரத்தை அகற்றும் தமிழ் நாடு அரசு மற்றும் வனத்துறையின் முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், பங்களிப்பையும் தர வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கோனோகார்பஸ் நச்சு மரம் நீக்கும் அரசின் நடவடிக்கைகளை மீண்டும் நான் வரவேற்று பாராட்டுவதோடு, இந்த நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தொடர்ந்து செயல்படுத்திட உறுதியேற்க வேண்டுமாய் தமிழ்நாடு வனத்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision