உடைக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் தூண் - பக்தர்கள் ஆதங்கம்

உடைக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் தூண் - பக்தர்கள் ஆதங்கம்

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள் மேலும் நேர்த்திக்கடன் ஆக தீச்சட்டி ஏந்தியும் அழகு குத்தியும் மொட்டை அடித்தும் காணிக்கை உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டும் செல்வார்கள். 

இந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் நுழைவாயில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தை கோபால செட்டியார் என்பவர் கட்டினார். இந்து அறநிலை துறை சார்பாக அவ்வப்போது நுழைவாயில் பெயிண்டிங் அடித்து புதுப்பிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து உடையார் பாலத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் நெல் மூட்டைகளை கனரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நுழைவாயில் வழியாக மண்ணச்சநல்லூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது நுழைவாயில் மேல்பகுதியில் கனரக லாரியானது இடித்ததால் இடது புறம் ம் நுழைவாயில் தூண் சேதம் அடைந்து விரிசல் விட்டது. 

இதனை அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி இருபுறமும் இரும்பு பேரைகளை கொண்டு தடுப்புகள் அமைத்தனர். மேலும் கனரக லாரியை இயக்கிய உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் நெல் மூட்டைகளை மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலையில் இறக்கிவிட்டு காவல் நிலையத்திற்கு அவரை சென்று விட்டார். இது குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் சார்பாக தொழில்நுட்ப பொறியாளர்களை கொண்டு நுழைவாயிலின் மேற்பகுதியில் இருந்த விநாயகர் மாரியம்மன் முருகன் சிலை மற்றும் நுழைவாயில் மேற்பகுதியில் இருபுறமும் இருந்த பூத பொம்மைகள் அகற்ற முடிவு செய்தனர். 

முதல் கட்டமாக நுழைவாயில் மேல்புற பகுதியில் செல்லும் அனைத்து மின் ஒயர்களின் மின்சாரத்தை நிறுத்தினர் அதனைத் தொடர்ந்து மின் ஒயர்கள் கேபிள் வயர்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து அருகில் இருந்த சிறு சிறு கடைகளை திறக்காமல் மூடினார்கள் பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆலோசனைப்படி சிறு சேதாரம் இன்றி மூன்று சிலைகள் பூதம் பொம்மைகளை பத்திரமாக ராட்சத கிரேன் உதவியுடன் எடுத்து வாகனங்களில் வைத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சென்றனர். 

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்பு துறையினரும் அப்பகுதியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ட்ரில்லர் கிரேன் உதவியுடன் சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் நுழைவாயிலை மற்ற கடைகளுக்கு சேதாரம் ஏற்படாத வண்ணம் இடித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது.... சமயபுரம் மாரியம்மன் கோவில் நுழைவாயில் கனரக லாரி எப்படி வந்தது இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். சமயபுரம் பேரூராட்சியினர் தான் இதற்கு காரணம் என்றும், இன்று ஆடி 18 என்பதாலும் நாளை ஆடி அமாவாசை என்பதாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இன்று இரு புறமும் போக்குவரத்தை தடை செய்து வைத்துவிட்டு திங்களன்று நுழைவாயிலை அப்புறப்படுத்தி இருக்கலாம். ஏன் இந்த அவசரக் கதியில் பண்ணுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து சமயபுரம் அறங்காவல் குழு தலைவர் வி.எஸ்.இளங்கோவன் கூறும்போது.... நள்ளிரவு நேரம் என்பதால் கனரக லாரி இப்பகுதியில் வந்தது தற்போது இந்த நுழைவாயிலை இடித்த பின்னர் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின் பெயரில் புதிதாக நுழைவாயில் கட்டப்படும். அந்த நுழைவாயிலானது 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும், தற்போது இடிக்காமல் இருந்தால் யார் மீதாவது விழுந்து உயிர் சேதம் ஏற்படும் ஆகவேதான் தற்போது இடிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision