திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகளும் காளையர்களும் - சிறப்பு தொகுப்பு

திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகளும் காளையர்களும் - சிறப்பு தொகுப்பு

பொங்கலையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பு இது.

Advertisement

அறுவடை திருநாளான பொங்கல் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும்.பொங்கலை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக திருச்சி புதுக்கோட்டை தஞ்சை நாகை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிக அளவில் நடைபெறும். இந்த நிலையில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போது ஒட்டுமொத்த தமிழகமே போராட்டத்தில் ஈடுபட்டது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இளைஞர்களும் அவர்களுடன் பொதுமக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்துக்கு எதிராக கொந்தளித்த இளைஞர்கள் சென்னையை போல் திருச்சியிலும் நீதிமன்றம் பின்புறம் ஆயிரக்கணக்கில் ஒன்று கூடி தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழா போல் திருச்சி மாவட்டம் சூரியூர், நவல்பட்டு, நவலூர் குட்டப்பட்டு, திருவெறும்பூர், துவாக்குடி, ஆவாரங்காடு, புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை. தை பிறந்தாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் களை கட்ட தொடங்கி விடும். பெரும்பாலான இடங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவும், மாட்டுப்பொங்கல் தினத்தன்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழா போல் நடைபெறுவது வழக்கம்.

Advertisement

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க வரும் காளையர்களுடன் மோதுவதற்கான காளைகளை தயார் படுத்தும் பணி அதாவது அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்படுவது இப்போதே தொடங்கி விட்டது. திருச்சி அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் 50- க்கும் மேற்பட்ட காளை மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தி வருகிறார்கள். அங்குள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், கிராமத்து இளைஞர்களும்.

இந்த கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரரும் காளை வளர்ப்பவருமான வினோத் 4 ஜல்லிக்கட்டு காளைகளை பராமரித்து வருகிறார். அதே போன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்களும் ஜல்லிகட்டு காளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இந்த காளைகளுக்கு குளத்தில் நீச்சல் பயிற்சி, மண்ணை கிளறி சீறிப்பாய பயிற்சிகள், காளைகளை சீண்டி கோபப்பட வைப்பது போன்ற பயிற்சிகள் அங்குள்ள இளைஞர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய வினோத்.. "தாத்தா, அப்பாவை தொடர்ந்து நானும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன். சிறு வயதில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளை எங்கள் குழந்தைகள் போல் பராமரித்து வருகிறோம். ஒரு காளைக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் செலவாகிறது" என்றார்.

பச்சைப்புல், பச்சரிசி, சோளமாவு, கோதுமை தவிடு, துவரம் பருப்பு பொட்டு ஆகியவை உணவாக கொடுக்கப்படுகிறது. நோய்கள் நோய் நொடிகள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க Shed அமைக்கப்பட்டுள்ளது. வரும் பொங்கல் அன்று சூரியூரில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதற்காக இந்த காளைகளை தயார் படுத்தி வருவதாக கூறுகின்றனர்.வீரத்தின் விளைநிலமான தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெறும் விளையாட்டு மட்டுமல்ல. கௌரவத்தின் அடையாளம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a