கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி வீதிகளில் வலம் வந்து பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்த காலமாக 40 நாட்கள் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி கடந்த பிப்ரவரி 22ம்தேதி சாம்பல் புதன் நிகழ்வு தொடங்கி தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களின் புனித நாளான குருத்தோலை ஞாயிற்றுக்கிழமை இன்று அனுசரிக்கப்படுகிறது.
தவக்காலத்தின் இறுதிக்கட்ட வாரம் மற்றும் புனித வாரத்தின் ஆரம்பமாக கடைபிடிக்கப்படும் இன்று இறை சித்தத்தை ஏற்று இயேசு தாம் பாடுகள்பட, சிலுவையில் உயிர்விடப் போவதையடுத்து ஜெருசலேம் நகருக்கு அரசுபவனியாக வந்த நாளை நினைவுகூறும் விதமாக குறுத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி திருச்சி மாநகரில் பிரசித்திபெற்ற பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தில் குருத்தோலை ஏந்தி பவனியாக வந்தனர். இதே போன்று குழந்தை இயேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை அந்தோணி இருதயராஜ் தலைமையில் அருட்தந்தைகள் விமலன், ஜெயசீலன் ஆகியோர் பங்கேற்று அதிகாலை சிறப்பு திருப்பலியிணை நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என அனைத்து கிறிஸ்தவ பங்குமக்கள் குருத்தோலைகளை தங்களது கைகளில் ஏந்தியவாறு ஓசானா.... ஓசானா என்று பாடல் பாடியவாறு தெருக்களில் சென்று பின்னர் ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் அங்கு தவக்கால பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தவக்காலத்தின் முக்கிய நாட்களான பெரிய வியாழன், பெரிய வெள்ளியை தொடர்ந்து ஏப்ரல் 9ம்தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் தினம் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும்.