முசிறியில் மாரியம்மன் கோயில்களில் தீமிதி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு..

முசிறியில் மாரியம்மன் கோயில்களில் தீமிதி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு..

திருச்சி மாவட்டம், முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள மகாமாரியம்மன் மற்றும் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்களில் தீ மிதி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேல், கரகம் பாலித்து சிறப்பு பூஜைகளும், சுவாமி அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது கரகம் தூக்கி வந்தவர் மூன்று முறை தீ மிதித்து அக்னி குண்டத்தை கடந்து வந்தார். அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோசமிட்டனர்.

பின்னர் வேண்டுதலை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். அப்போது பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டும், அழகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் தீ மிதித்தனர். திருநங்கைகளும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக வெயில் தாக்கத்தினால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கவும், நலமுடன் வாழவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் திருச்சி ரோட்டில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மாரியம்மன் கோயிலிலும் தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் மூலவரும், உற்சவரும் காட்சியளித்தனர். கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டம் அருகே கோயில் பூசாரி குட்டி குடித்து அருள்வாக்கு கூறினார்.

இரு கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அசம்பாவிதங்களை தவிர்க்க முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் ஆலோசனையின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision