திருச்சி கலையரங்கில் தோட்டக்கலை கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்

திருச்சி கலையரங்கில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (20.02.2025) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டு தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்த கையேட்டினை வெளிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
கல்ப விருட்சம் என்றழைக்கப்படும் தென்னை மரம் நமது வாழ்வோடு அனைத்து நிலைகளிலும் ஒன்றிணைந்து உள்ளது. தென்னை மரம் ஒரு முழுமையான பயிராகத் திகழ்கிறது. மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமது வாழ்க்கைக்கு பயன்படுகிறது. இந்த வாய்ப்புகளை, நவீன தொழில்நுட்ப உதவியுடன் பொருளாதார ரீதியாக பயன்படுத்த முற்பட்டால் நமது விவசாய வருமானத்தை அதிகரிக்கலாம்.
உழவர் உணவளிப்பதனால்தான் உலகம் வாழ்கிறது. இது தென்னைக்கு பெருந்தும். ஏனெனில் தேங்காய், தேங்காய் எண்ணெய், நார், நார் சாரம், கம்பணைகள், மரச்சாமான்கள், மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகள் என பல்வேறு பொருள்கள் தென்னையில் இருந்து கிடைக்கின்றன. தாகம் தீர்க்கும் இளநீராகவும் உடல் சூட்டை தணிக்கும் பதநீராகவும், காய்கள் சமையலுக்கும், இலைகள் கூரைகள் அமைக்கவும் பயன்படுகிறது. மரத்தின் வேர்கள் மண் அரிப்பை தடுப்பதோடு நிலத்தடி நீரின் அளவையும் அதிகரிக்கின்றது. இவ்வாறு விவசாய பெருமக்களுக்கு லாபம் ஈட்டும் இன்றியமையாத வரமாக அமைகிறது.
தென்னை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தையும், இந்தியாவில் தமிழ்நாடு 2-வது இடத்தையும் வகிக்கின்றது.திருச்சி மாவட்டத்தில் 5000 எக்டர் பரப்பளவில் 14 வட்டாரத்திலும் தென்னை பயிரிடப்பட்டு வருகின்றது. மருங்காபுரியில் 1668 எக்டரும், அந்தநல்லூரில் 762 எக்டரும், தொட்டியத்தில் 408 எக்டரும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.இதன் முக்கியத்துவம் கருதி 2024-25ஆம் நிதியாண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எக்டருக்கு ரூ.12,000/- மானியத்தில் 75 எக்டர் பரப்பு விரிவாக்கத்திற்கு தேவையான தென்னங்கன்றுகள் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென்னையில் வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.10,000/- மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தென்னை ஒட்டுண்ணி மையம் மூலம் தென்னை கருந்தலை புழுக்களை கட்டுப்படுத்தும் ஒட்டுண்ணி அட்டைகளும், தென்னை ஒட்டுமையம் மற்றும் நாற்றங்கால் பண்ணை மூலம் வீரிய ஒட்டு இரகங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போதைய பருவ நிலை மாற்றங்களால் பலதரப்பட்ட நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு அனைத்து பயிர்களும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இத்தகைய காலகட்டத்திற்கு ஏற்ற தென்னை சாகுபடியில் உயர் தொழில்நுட்ப முறைகளையும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவும், விளைச்சலை அதிகரிக்கும் உத்திகளைப் பற்றியும், விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கில் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றியும் எடுத்துரைக்கும் நோக்கில் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடன் தோட்டக்கலைத்துறையால் இத்தகைய மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் திருச்சிராப்பள்ளி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்சி நிலைய இணைப் பேராசிரியர் (தோட்டக்கலை) முனைவர் ஆர்.அருண்குமார் அவர்கள் செம்மையான முறையில் தென்னை சாகுபடி மற்றும் சாகுபடிக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் தென்னையில் பூச்சிகள் மேலாண்மை எனும் தலைப்பிலும், உதவி பேராசிரியர் (நோயியல்) முனைவர் வி.கே.சத்யா தென்னையில் நோய் மேலாண்மை எனும் தலைப்பிலும், இணைப் பேராசிரியர் (வினையியல்) முனைவர் எஸ்.நித்திலா தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் வேளாண்மை துறை இணை இயக்குநர் வசந்தா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயராணி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision