ஜனநாயக கடமையாற்ற அழைக்கிறார் மாவட்ட தேர்தல் அலுவலர்

ஜனநாயக கடமையாற்ற அழைக்கிறார் மாவட்ட தேர்தல் அலுவலர்

இந்தியத் திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் (19.04.2024) அன்று நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1665 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 1166 வாக்குச்சாவடி மையங்களில் இணையவழி நேரலை (Live Web Streaming) செய்திட வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று 8347 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் 4478 நபர்களுக்கு EDC எனப்படும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை பெற்றவர்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி மையத்திலேயே வாக்களிக்கலாம். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 4,357 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சிராப்பள்ளி பராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 757130 ஆண் வாக்காளர்களும், 796616 பெண் வாக்காளர்களும், 239 இதர வாக்காளர்களும் काला गया क्र 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் வாயிலாக 65 புகார்களும், சி.விஜில் செயலி மூலம் 148 புகார்களும் பெறப்பட்டு அனைத்து புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிகளை மீறியதாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை 33 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. நேற்றுவரை திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத்தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை நிலையான கண்காணிப்புக்குழுவினர் ரூ.1,26,28,349/- மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், ரூ.1,13,14,339 உரியவர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மாதிரி வாக்குச்சாவடி மற்றும் பெண் பணியாளர்களால் நிர்வகிக்கும் வாக்குச்சாவடி, மாவட்டத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி அலுவலர்களால் நிர்வகிக்கும் வாக்குச்சாவடி மற்றும் மாவட்டத்திற்கு இளையோர்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பயன்படுத்திட தேவையான பொருட்கள் அனைத்தும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டன. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்ட, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிட திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுவான சிறப்பு மையம் அமைத்திட உரிய ஏற்பாடுகள் கலையரங்கத்தில் செய்யப்பட்டு, இந்த மையம் (17.04.2024) அன்று தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் அஞ்சல் வாக்குகள் தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களால் அந்தந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 93642 அஞ்சல் வாக்குகள், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது.

நம் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாக்காளர்களும் தவறாது தங்கள் வாக்கை செலுத்தி பொதுத்தேர்தல் அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் , தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision