மாடித்தோட்டம்- அசத்தும் திருச்சி இன்ஜினீயரிங் பட்டதாரி

மாடித்தோட்டம்- அசத்தும் திருச்சி இன்ஜினீயரிங் பட்டதாரி

கட்டிட பொறியாளர்கள் இயற்கை வளங்களை அழித்து புதிய கட்டிடங்களை உருவாக்குகின்றனர்    என்ற பொதுப்படையான  கருத்து நிலவுகிறது. இதில் இருந்து மாறுபட்டு, இயற்கை விவசாயம், அதிலும் குறிப்பாக மாடி தோட்டம் மூலம்  இயற்கையை  காத்து வருகிறார் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட பொறியாளரான ஹரிஹர கார்த்திகேயன். 

திருச்சியில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவரது துவக்கமான 'கங்கா ஆர்கானிக் ஃபார்ம்' மூலம் மக்களுக்கு  மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும் அவருடைய பயணத்தைக் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கையில்,

"பொறியியல் படிப்பு முடித்த பின்பு வேலைக்காக ஓமன் நாடு சென்றிருந்தேன். இந்தியா என்று  என்னை அடையாளப்படுத்திக் கொண்ட போது என்னுடன்  பணிபுரிந்தவர்  பசுமையான நாட்டிலிருந்து வந்து இருக்கிறீர்கள் என்று கூறினார்.

அப்போதுதான் உணர்ந்தேன் இயற்கை வளமிக்க  இந்தியாவை விட்டு நாம் ஏன் இங்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று. உடனடியாக வேலையை விட்டு விட்டு இங்கு வந்து மாடித்தோட்டம் அமைப்பதில் ஈடுப்பட்டேன்" என்கிறார். 

மாடித்தோட்டம் அமைக்கும் பொழுது அதிக அளவிலான எடை தாங்க முடியாமல் மாடி  பாதிக்கப்படும், வீடு சேதம் அடையும் என்று பலர் கருதும் நிலையில் அதனை தவறு என்று உணர்த்தவே மாடித்தோட்டம் அமைக்க முடிவு செய்திருக்கிறார் ஹரி. 

நிலத்தில் தோட்டம் அமைப்பது விட மாடி தோட்டத்தில்  சில சவால்களும் இருக்கின்றது. ஆனால் அதே சமயம் எண்ணிலடங்கா நன்மைகளும் இருக்கின்றன. 

குறிப்பாக மாடித்தோட்டம் அமைக்கும் பொழுது ஒரு பயிர் வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி, நீர், பாதுகாப்பு அனைத்தும் மாடித் தோட்டங்களில் எளிதில் கிடைத்துவிடுகிறது.

வெறும் செம்மண் மட்டுமே பயண்படுத்திடாமல்  கோகோ பீட் கலவையை பயன்படுத்தலாம். இதனால் அதிக அளவிலான எடை இல்லாமல்  நாம் எளிமையாக நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும்.உயிரி உரங்கள் செம்மண் கோகோ பீட் ஆகியவற்றின் கலவை  வளரும் செடிகளுக்கு அதிக    ஊட்டச்சத்தை அளிக்கவும் வாய்ப்புள்ளது. 

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து மேலும் கூறும் ஹரி " செடி வளர்க்க தொட்டிகளுக்கு பதிலாக பைகளை பயன்படுத்தினோம்.செடிகளில் ஸ்டார்ச்  அதிகரிப்பதற்கு வேர்கள் பரந்து வளர்வதற்கு  உதவியாக இருக்கும்." என்கிறார். 

  

மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எவ்வாறு மாடி தோட்டம் அமைக்க வேண்டும் அதனுடைய பராமரிப்பு முறைகள் அனைத்தையும்  மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் ஹரி. மேலும் பொன்மலை சந்தையில் மக்களை சந்தித்து இயற்கை விவசாயம் மாடி தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

வருங்காலங்களில்  மாடித்தோட்டத்தில் மட்டுமின்றி  நம்மாழ்வார் வழியில்  இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்றார் கார்த்திகேயன்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn