திருச்சி உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்ததும், திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றதாகும். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்துவரும், இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரசித்திபெற்ற இவ்வாலயத்தில் இன்று பூச்சொரிதல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில்நிர்வாகம் சார்பில் உதவிஆணையர் ஞானசேகரன் தலைமையில் ஊழியர்கள் கிராமமக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்துவருகின்றனர். அதேநேரம் அம்மனுக்கு சாத்தபட்ட பூக்கள்யாவும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டுவருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn